அணி இலக்கணம்

அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். அணி பலவகைப்படும். அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும். இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றி கூறப்படுகின்றது. அவற்றுள் சில,


1.      தன்மை அணி

2.        உவமையணி

3.        உருவக அணி

4.       தீவக அணி

5.        பின்வருநிலையணி

6.        முன்னவிலக்கணி

7.        வேற்றுப்பொருள் வைப்பு அணி

8.        வேற்றுமை அணி

9.       விபாவனை அணி

10.   ஒட்டணி

11.     அதிசய அணி

12.     தற்குறிப்பேற்ற அணி

13.     ஏது அணி

14.     நுட்ப அணி

15.     இலேச அணி

16.  நிரநிரை அணி

17.     ஆர்வ மொழி அணி

18.     சுவை அணி

19.     வஞ்சப் புகழ்ச்சியணி

20.    வேற்றுமை அணி

21.     இல்பொருள் உவமையணி

22.    டுத்துக்காட்டு உவமையணி

23.     எடுத்துக்காட்டு உவமையணி

24.     சொல் அணி

உவமையணி

 தமிழிலக்க   ணத்தில், உவமையணி என்பது

கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது.
ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவது.
தெரியாத பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது

உவமையணி மூன்று வகைப்படும்.


அவையாவன: பண்பு உவமையணி, தொழில் உவமையணி, பயன் உவமையணி

பண்பு உவமையணி

உதாரணம்: குத்துப்பல், பவளவாய், கயல்விழி
பவளம் போல் சிறப்பு பவளத்தின் பண்பு.

 தொழில் உவமையணி

உதாரணம்: புலிமறவன், குரங்குமனம்
செயலை விளக்குவது
புலியின் வீரம், தாவும் மனம்.

 பயன் உவமையணி

உதாரணம்: மழைக்கை
மழை போல பொழியும்(கொடுக்கும்) கை

 உவமையணியில் உவமானம் ,உவமேயம், உவமை உருபுகள் ஆகிய மூன்றும் வெளிப்படையாக வரும். இவைகளோடு பொதுத்தன்மையும் இருக்கும்.

 உவமானம்

ஒப்பிடக் கொண்டு வந்த பொருள்

 உவமேயம்

ஒப்பிட எம்மிடமுள்ள பொருள்

 உவமை உருபுகள்

உதாரணம்: போன்ற, போல, நிகர்த்த, உடைய, ஒப்ப, அன்ன, அனைய

 பொதுத்தன்மை

 இரண்டுக்கும் உள்ள தன்மை(சந்திரன் போல முகம். இங்கு சந்திரன் உவமானம். முகம் உவமேயம். இதில் சந்திரனின் வடிவம், அழகு, வட்டம், குளிர்மை போன்றவை பொதுத்தன்மை)

சான்று: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை

இங்கு,

 உவமானம்: அகழ்வாரைத் தாங்கும் நிலம்
உவமேயம்: தம்மை இகழ்வார்ப் பொறுத்தல்
உவமை உருபு: போல


உவமைத்தொகை

 வெளிப்படையாகத் தெரியாத உவமைஉருபுகள் உவமைத்தொகை எனப்படும். அதாவது உவமை தொக்கி நிற்பது.

உதாரணம்: கயல்விழி - கயல் போல் விழி
இங்கு உவமை உருபு (போல்) மறைந்து நிற்கிறது.

இதே போல இன்னொரு உதாரணம்:
மதிமுகம் - மதி போன்ற முகம்
உவமை உருபு (போன்ற) மறைந்து நிற்கிறது.

 உவமையணியை இன்னொரு விதத்தில் இன்னும் இரண்டாகப் பிரிக்கலாம்.
அவையாவன:
1-
எடுத்துக்காட்டு உவமையணி
2-
இல்பொருள் உவமையணி

 

எடுத்துக்காட்டு உவமையணி

இது நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது
உதாரணம்:
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி
மாந்தர்க்கு கற்றெனத் தூறும் அறிவு


மணற்கேணியானது எவ்வளவு ஆழமாகக் கிண்டுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நீர் சுரக்கும். அதே போல மனிதர் எவ்வளவுகெவ்வளவு கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களது அறிவு பெருகும்.

 இல்பொருள் உவமையணி

இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.
உதாரணம்:
அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கை
வன்பால் கண் வற்றல் மரம் தளிர்த்தற்று


அதாவது வலிமையான ஒரு பாலைவனத்திலே பட்டமரம் தளிர்த்ததைப் போன்று அன்பில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது. அதாவது வலிமையான பாலைவனத்திலே பட்டமரம் தளிர்க்கவே தளிர்க்காது. அதே போலத்தான் அன்பில்லா வாழ்க்கையும்.

 

உருவக அணி

உருவக அணி என்பது அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது. உவமை அணியின் மறுதலை.


எடுத்துக்காட்டு

இதுதான் அது.
அவளின் முகம்தான் சந்திரன்.

  • பச்சை மாமலை போல் மேனி - இது உவமை அணி.
  • மையோ மாமலையோ மறிகடலோ - இது உருவக அணி

இதில் கண்ணனை மை, மாமலை, மறிகடல் என உருவகிக்கப் படுகிறது. மை போன்ற மேனி என்று சொல்லியிருந்தால் இது ஒரு உவமையணி. ஆனால் மையோ என்னும் போது அவன் மேனிதான் மை என்று சொல்லியாயிற்று. இது உருவக அணி.


எடுத்துக் காட்டுகள்

  • உவமை அணி - மதிமுகம் (மதி போன்ற முகம்)
  • உருவக அணி - முகமதி (முகம்தான் மதி)

  • உவமை அணி - புலி போன்ற வீரன் வந்தான்
  • உருவக அணி - புலி வந்தான்

  • உவமை அணி - மலர்க்கை (மலர் போன்ற கை)
  • உருவக அணி - கைமலர் (கைகள்தான் மலர்)

  • உவமை அணி - வேல்விழி (வேல் போன்ற விழி)
  • உருவக அணி - விழி வேல் (விழிதான் வேல்)

தன்மை நவிற்சி அணி

தன்மை நவிற்சி அணி என்பது எவ்வகைப் பொருளையும் அல்லது எச்செயலையும் உண்மையான முறையில் உள்ளபடி உள்ளதாக விளக்கும் சொற்களால் அமைவது.

உதாரணம்

  • உள்ளம் குளிர்ப்ப - நெஞ்சம் குளிர
  • ரோமம் சிலிர்க்க - ரோமம் சிலிர்க்க
  • உரை தள்ள - வார்த்தை வராமல் தடுமாற
  • விழிநீர் அரும்ப - விழிநீர் சிந்த
  • தன்னையே மறந்து நின்றாள் - தன்னை மறந்து நின்றாள்

இங்கு எந்த உவமானமோ, அன்றி உவமேயமோ, அல்லது மிகைப்படுத்தலோ இல்லாததைகக் காண முடிகிறது.

தன்மை நவிற்சி அணியின் தன்மைகள்

  • உள்ளதை உள்ளபடி இயல்பாகக் கூறும்
  • மிகைப்படுத்தல் இருக்காது
  • உதாரணம் இருக்காது
  • உருவகப் படுத்தல் இருக்காது
  • சொல்வதில் அணிக்கேயுரிய அழகு காணப்படும்

உதாரணக் கவிதையொன்று

இருந்து முகந் திருத்தி
ஈரோடு பேன் வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப
வருந்தி ஆடினாள் பாடினாள்
ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத்தான்


இக்கவிதை வரிகளில் உருவக அணியோ அன்றி உவமை அணியோ இல்லாததைக் காண முடிகிறது.

இன்னொரு உதாரணம்

மெய்யில் பொடியும் - உடம்பு முழுக்கத் தூசியும்
விரித்த கருங்குழலும் - விரித்த தலைமயிரும்
கையில் தனிச் சிலம்பும் - கையிலே தனிச்சிலம்பும்
கண்ணீரும்அழுகையும்

 

கண்ணகியின் கோலத்தை விளக்கும் கவிதையில் உள்ள இந்த வரிகளில் ஒவ்வொன்றும் இயல்பாகவும், மிகைப்படுத்தல் இன்றியும் அதே நேரம் அழகு குன்றாமலும் இருப்பதைக் காணமுடிகிறது.

தற்குறிப்பேற்ற அணி

தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்.

.கா:

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட
                                        சிலப்பதிகாரம்

விளக்கம்:

கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.

பின்வருநிலையணி

பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ இவ்விரண்டுமோ பல முறை பின்னரும் வருவது.

இது மூன்று வகைப்படும்:

  • சொல் பின்வருநிலையணி
  • பொருள் பின்வருநிலையணி
  • சொற்பொருள் பின்வருநிலையணி

சொல் பின்வருநிலையணி

சொல் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் வேறு ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது.

.கா:

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்
                                --திருக்குறள (592)

இக்குறட்பாவில் 'உடைமை' என்ற சொல் பெற்றிருத்தல், உடைய, பொருள் என வேறுபட்ட பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொல் பின்வருநிலையணி ஆகும்.

பொருள் பின்வருநிலையணி

பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது.

.கா:

அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திதழ்
விண்டன கொன்றை விரிந்த கருவிளை
கொண்டன காந்தள் குலை

இப்பாடலில் மலரதில் என்னும் பொருள் தரக்கூடிய அவிழ்தல், அலர்தல், நெகிழிதல், விள்ளல், விரிதல் ஆகிய சொற்கள் பல முறை வந்துள்ளமையால் இது பொருள் பின்வருநிலையணி ஆகும்

சொற்பொருள் பின்வருநிலையணி

சொற்பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பல முறை வருவது.

.கா:

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
                             --திருக்குறள் (299)

இக்குறட்பாவில் விளக்கு என்னும் சொல் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்

 

 வஞ்சப் புகழ்ச்சியணி

வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதும், இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்.

.கா

  • புகழ்வது போல் இகழ்தல்

 

தேவ ரனையர் கயவர் அவருந்தாம் 
மேவன செய்தொழுக லான்
                                            திருக்குறள் - திருவள்ளுவர்

விளக்கம்:

 "கயவர்கள் தம்மனம் விரும்பும் செயல்களைத் தடுப்பாரின்றிச் செய்து முடிப்பதால் தாம் விரும்பும் செயல்களைச் செய்யும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்" என்பது இக்குறட்பாவின் பொருள்.

கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம். எனவே இது உண்மையில் கயவர்களை பழித்தலே ஆகும். (புகழ்வது போல் இகழ்தல்)

  • இகழ்வது போல் புகழ்தல்

பாரி
பாரி என்றுபல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே
                                           புறநானூறு
                                           பாடியவர்: கபிலர்

விளக்கம்:

"புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைம்மாறு கருதாமல் கொடுக்கின்றான்? மாரியும்தான் கைம்மாறு கருதாமல் கொடுத்து இவ்வுலகம் புரக்கின்றது" என்பது இப்பாடலின் பொருள்.

இது பாரியை இகழ்வது போலத் தோன்றினும், பாரிக்கு நிகராகக் கொடுப்பாரில்லை என்று புகழ்ந்ததே ஆகும்.(இகழ்வது போல் புகழ்தல்)

இரட்டுறமொழிதல் அணி

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும். இதனைச் சிலேடையணி என்றும் அழைப்பர். ஒரு சொல் பிரிபடாமல் தனித்துநின்று பல பொருள் தருவது செம்மொழிச் சிலேடை என்றும் சொற்றொடர் பல வகையாகப் பிரிக்கப்பட்டுப் பல பொருள்களைத் தருவது பிரிமொழிச் சிலேடை என்றும் பெயர் பெறும்.

எடுத்துக்காட்டு

திருக்குற்றாலக் குறவஞ்சியில் உள்ள பின்வரும் பாடலில்[1] இவ் அணியைப் பயன்படுத்தியுள்ளதைக் காணலாம்.

     

 
பல்லவி
கண்ணி கொண்டு வாடா-குளுவா
கண்ணி கோண்டு வாடா!
மீறும் அலஞ்சிக் குறத்தியைக் கொண்டசெவ்
   வேட்குற வன்முதல் வேட்டைக்குப் போனநாள்
ஆறுநாட் கூடி ஒருகொக்குப் பட்டது
   அகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில்
சாறாக வைத்தபின் வேதப் பிராமணர்
   தாமுங் கொண் டார்சைவர் தாமுங் கொண்டார்தவப்
பேறா முனிவரும் ஏற்றுக்கொண் டார்இதைப்
   பிக்குச் சொல்லாமலே கொக்குப் படுக்கவே (கண்ணி)

 

விளக்கம்

குற்றாலத்தில் பறவைகள் பெரும் எண்ணிக்கையில் வலசை வந்து மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் சிங்கன் அப்பறவைகளைப் பிடிப்பதற்காகத் தன் நண்பனைக் கண்ணி கொண்டுவரச் சொல்கிறான். இவ்வாறு செய்வதில் தவறில்லை எனச்சொல்லும் வகையில் அமைந்த இப்பாடலின் நேரடிப் பொருள் பொதுவான அறிவுக்கு ஒவ்வாததாக அமைந்திருந்தாலும் அதன் உள் மறைபொருள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அமைந்துள்ளது. இப்பாடல் இவ்வகையில் நயமுடன் அமைந்துள்ளது.


நேரடியான பொருள்

வடிவழகிலே அனைவரையும் மிஞ்சும் இலஞ்சி நகர்க் குறத்தியின் மணாளன், செவ்வேளாகிய குறவன் தனது முதல் வேட்டைக்குச் சென்றான். அம்முறை ஆறு நாட்களுக்குப் பின்னர்தான் அவனுக்கு ஒரு கொக்கு அகப்பட்டது. அதை அவித்து ஒரு சட்டியிலே குழம்பாகச் சமைத்தான். அதனை மறையோதும் பிராமணர்களும், சைவர்களும் உண்டனர். தவப்பேறுடைய முனிவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். அதனால் மறுப்பேதும் சொல்லாமல் வேட்டையாடுவதற்குக் கண்ணியை எடுத்துக்கொண்டு வாடா குளுவா!


உட்பொருள்

முருகன் (குறவன்) சூரனாகிய மாமரத்தைத் (கொக்கைத்) தான் படையெடுத்துச் சென்ற ஆறாவது நாளில் வென்றான். அது சட்டித் திருநாள் எனப்படும். சாறு என்றால் திருவிழா எனும் பொருளும் உண்டு. அச்சட்டித்திருநாளை அனைவரும் கொண்டாடுவர். இவ்வாறான உட்பொருளைக் கவிஞர் சுவைபட உரைத்துள்ளார்.

சொல் அணி

சொல் அணி ஆறு வகைப்படும். அவையாவன: எதுகை, மோனை, சிலேடை, மடக்கு, பின்வருநிலை, அந்தாதி

எதுகை

 செய்யுளில் அல்லது வசனத்தில் இரண்டாவது எழுத்து ஒழுங்கு படத் தொகுக்கப் பட்டிருப்பது.
உதாரணம்

ட்டகத்தைக் ட்டிக்கோ
கெட்டியாக ட்டிக்கோ
ட் ட்டப் பொட்டுக்காரி

 

மோனை

செய்யுளில் அல்லது வசனத்தில் முதலாவது எழுத்து ஒழுங்கு படத் தொகுக்கப்பட்டிருப்பது.
உதாரணம்

ட்டோடு குழலாட
ண்ணென்ற மீன் ஆட
பொட்டோடு கையாட ஆட
பெண்ணென்ற நீயாடு ஆடு

 

சிலேடை

ஒரு சொற்றொடரை வேறு வேறு இடங்களில் பிரிக்கும் போது வேறு வேறு பொருள் தருவது.
உதாரணம்

ஓடும் இருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலைதனுக்கு நாணாது
இச் செய்யுளில்


ஒரு கருத்து:
நாய்
ஓடும். இருக்கும். அதன் வாயின் உட்பக்கம் வெள்ளையாக இருக்கும். சாப்பாட்டை நாடும்.
குலைப்பதற்கு நாணாது என்று வரும்.

மறு கருத்து

தேங்காய்க்கு ஓடு இருக்கும். உட்பக்கம் வெள்ளையாக இருக்கும்
குலை போட நாணாது. நாடும்- மனிதர்களால் விரும்பப் படும் என்று வரும்.

இங்கு ஒரு செய்யுள் இரு வேறு பொருள்களைத் தருகிறது.
தனியாக ஒரு சொல்லைப் பார்க்கும் போது

அறிவில்லாதவன்

அறிவில்+ஆதவன்
அறிவு+இல்லாதவன் என இருபொருள்களைத் தருகின்றன.

 

மடக்கு

ஒரு சொற்றொடரில் தொடர்ந்து வரும் சொல் ஒன்றாக இருக்கும். ஆனால் பொருள் வேறுபடும்.


உதாரணம்

அரவம் அரவம் அறியுமா?
இதன் பொருள்
பாம்பு சத்தம் அறியுமா.
ஒரு அரவம் பாம்பையும், ஒரு அரவம் சத்தத்தையும் குறிக்கின்றது.

 

பின்வருநிலை

ஒரே சொல் அடுத்தடுத்து ஒரே பொருளில் வருவது


உதாரணம்

நோய் எல்லாம் நொய் செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டுபவர் இதன் பொருள்:
துன்பம் இல்லாமல் வாழ விரும்புகின்றவர் துன்பம் செய்ய மாட்டார். ஏனெனில் அத் துன்பம் செய்வோரையே சாரும் என அறிந்துள்ளனர்.
இங்கு நோய் என்பது துன்பத்தைக் குறிக்கிறது. நோய் என்ற ஒரே சொல் மீண்டும் மீண்டும் அதே பொருளில் வருகிறது.

 

அந்தாதி

பாடலில் ஒரு வசனத்தில் முடியும் சொல் அடுத்த வசனத்தில் தொடக்கமாக வருவது.
உதாரணம்

வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்

தரம் 11

தரம் 10

NIE | Ministry of Education  | School Net | Department Examination 

AL-Mubarak Central College
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk
Home | Al-Mubarak | Ramzy | School Pic Gallery | Staff | For Student | For Teacher | Exam paper | Others

Make a Free Website with Yola.