இடைச்சொற்கள்

      மரம், மாடு, நாய், மனிதன் போன்ற பெயர் சொற்களும் வா, போ, விடு, நட போன்ற வினைச்சொற்களும் தனித்து நின்று பொருள் தருவன. ஆனால், மரங்கள் ,மரங்களை, மரங்களுக்கு முதலிய சொற்களில் வரும் -கள், -, -கு ஆகிய பன்மை விகுதி, வேற்றுமை உருபு  போன்றவையும், வந்தான், போனான், போனால் போன்ற சொற்களில் வரும் -ந்த்-, -ஆன், -அ-, ஆல்- போன்ற கால இடைநிலைகள் பால் விகுதிகள் போன்றனவும் தனித்து பொருள் தராது. இவை தனித்து பொருள் தராது. இவை தனித்து இயங்கா ஆனால் இவை இன்றி வாக்கியங்கள் இயங்காது என்பதனை நினைவில் கொள்க. இவற்றையே நாம் "இடைச்சொல்" என்போம்.

      எனவே தனித்து நின்று பொருள் தராமல், பெயர் வினையுடன் சேர்த்து வந்து இலக்கணப் பொருள் தருகின்ற சொல் உருப்புகளையே இடைச்சொல் என்பர். நான், தம்பி, வீடு, போ ஆகிய நான்கு சொற்களை ஒன்றை அடுத்து ஒன்றை அடுக்கினால் நாம் ஒரு வாக்கியத்தைப் பெறமுடியாது. இவற்றுடன் இடை சொற்கலை இணைத்து வெவ்வேறு விதமான வாக்கியங்களைப் பெறலாம்.

* நான் தம்பியின் வீட்டுக்குப் போனேன்.

* நானும் தம்பியும் வீட்டுக்குப் போனோம்.

* நான் தம்பியுடன் வீட்டுக்குப் போனேன்.

* நான் தான் தம்பியுடன் வீட்டிலிருந்து போனேன்.

"இடைச்சொல்லாவது, பெயரும் வினையும் போலத் தனித்து நடக்கும் ஆற்றல் இல்லாததால் அப்பெயரையும் வினையையும் சேர்த்து வரும் சொல்லாம்." 

(295 ஆறுமுக நா.)

இடைச்சொல் வகைகள்

"வேற்றுமை வினை சாரியை ஒப்பு உருபுகள்

தத்தம் பொருள் இசைனிறை அசைநிலை

குறிப்புஎன எண் பகுகியின் தனித்து இயலின்றிப்

பெயரினும் வினையினும் பின்முன் ஓரிடத்து

ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச்சொல்."

வேற்றுமை உருபுகள், விகுதிகள், சாரியை,  உவமை உருபு தமக்குரிய பொருளை உணர்த்தி வருபவையும் அசைத்தலே பொருளாக நிற்பவையும் செய்யுளிசை நிறைந்து வருபவையும் வெளிப்படையாக வரும் இவற்றைப் போல் இன்றி ஒலி, அச்சம், விரைவு ஆகியவற்றைக் குறிப்பினால் உணர்த்தி வருபவையும் என்னும் எட்டு வகையிடை உடையன இடைச்சொல் என்று நன் நூல் கூறும்.

ஆனால் இடைச் சொற்களை தற்காலத்தில் பின்வருமாறு வகுப்பார்.


வேற்றுமை உருபுகள் :-

        பெயர் சொற்களின் இலக்கண தொழிற்பாடே வேற்றுமை ஆகும். எனவே பெயர் சொற்களே வேற்றுமை உருபுகளை ஏற்கும்.

      , ஆல், ஓடு, கு, இல், இன், அது, இல், இடம்.

          -     மரத்தை           ( 2ம் வேற்றுமை )

      ஆல்  -     பேனாவால்        ( 3ம் வேற்றுமை )

      ஓடு   -     மாணவனோடு     ( 3ம் வேற்றுமை )

      கு    -     பாடசாலைக்கு     ( 4ம் வேற்றுமை )

      இல்   -     மரத்தில்           ( 5ம் வேற்றுமை )

      இன்  -     கண்ணனின்        ( 6ம் வேற்றுமை )

      அது  -     கண்ணனது        ( 7ம் வேற்றுமை )

 

திணை, பால், எண், இட விகுதிகள்  :-

வினைச்சொற்கள் எழுவாய் பயனிலை இயைபுக்கு ஏற்ப விகுதியைப் பெரும் அவையே திணை, பால், எண், இட விகுதிகள் ஆகும்.

      ஏன்         -     போனேன்    (தன்மை ஒருமை)

      ஓம்         -     போனோம்   (தன்மை பன்மை)

      ஆய்        -     போனாய்    (முன்னிலை ஒருமை)

      ஈர்கள்       -     போனீர்கள்   (முன்னிலை பன்மை)

      ஆன்        -     போனான்    (படர்க்கை ஆண்பால்)

      ஆள்        -     போனாள்    (படர்க்கை பெண்பால்)

      ஆர்         -     போனார்     (படர்க்கை மறியதை)

      ஆர்கள்      -     போனார்கள்  (படர்க்கை பலர்பால்)

      அது        -     போனது     (படர்க்கை ஒன்றன்பால்)

                -     போயின     (படர்க்கை பலவின்பால்)

 

பன்மை விகுதிகள்  :-

ஒரு பொருளின் பன்மையைக் குறிக்க இவ்விகுதிகள் பெயருடன் இணைக்க்கப் படுகிறன.

      -கள்  -     மரங்கள்

      -மார் -     தாய்மார்

 

கால இடை நிலைகள்  :-

வினைச் சொற்களே காலத்தை உணர்த்துகிறன. எனவே வினை சொற்களில் வரும் இடை நிலைகளே காலத்தை உணர்த்துகின்றன.

  • இறந்த காலம் உணர்த்தும் இடைநிலைகள்.

      - த் -       =     செய்தான்

      - ட் -       =     உண்டான்

      - ற் -       =     சென்றான்

      - இன் -    =     உறங்கினான்

      - த்த் -     =     படித்தான்

      - ந்த் -     =     நடந்தன்

  • நிகழ்கால இடைநிலைகள்

      - கிறு -     =     போகிறான்

      - கின்று -   =     போகின்றான்

  • எதிர்கால இடைநிலைகள்

      - ப் -       =     உண்பேன்

      - வ் -            =     தருவேன்

      - ப்ப் -      =     படிப்பன்

 

 பெயரெச்ச வினையெச்ச விகுதிகள்  :-

   திணை, பால், எண், இட விகுதிகள் பெறாது எச்ச விகுதிகளைப் பெற்று வரும் வினைகள் எச்ச வினைகள் இது பெயரெச்சம், வினையெச்சம் என இரண்டு வகைப்படும்

  • பெயரெச்ச விகுதிகள்

       இவை பெயர்ச் சொற்களைக் கொண்டு முடிவடைவதால் இப்பேர் பெற்றது .

      -        =     வந்த, வராத, செய்த, செய்யாத

      - உம்       =     வரும்

  • வினை எச்ச விகுதிகள்

      இவை வினையைக் கொண்டு முடிவடைவதால் இப்பேர் பெற்றது.

      -        =     படித்து, படிக்காது

      - மல்       =     படிக்காமல்

      - ஆல்      =     வந்தால்

 

எதிர்மறை இடைநிலைகள்  :-

  எதிர்மறை வினைச் சொற்களில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து எதிர்மறை உணர்த்தும் இடைநிலைகள் ஆகும்.

      - மாட்டு - =     வரமட்டான்

      - ஆ -      =     போகாது

      - ஆத் -    =     செய்யாத [எச்சம்] 

 

ஆக்கப்பெயர் விகுதிகள்  :-

    பெயர் அல்லது வினைச் சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச் சொற்கள் ஆக்கப் பெயர் ஆகும்.

 இது        1. பெயர்  +  விகுதி

             2. வினை  +  விகுதி       என்ற இரண்டு அமைப்பில் காணப்படும்.

  •   பெயர் + விகுதி          =     பெயர்

            - ஆளி            =     முதலாளி

            - இயல்           =     பொருளியல்

            - சாலி            =     புத்திசாலி

            - காரன்           =     பூக்காரன்

            - தனம்           =     முட்டாள்தனம்

            - துவம்           =     சமத்துவம்

            - இயம்           =     பெண்ணியம்

            - ஆளன்          =     எழுத்தாளன்

  •   வினை + விகுதி          =     பெயர்

            - ச்சி             =     மலர்ச்சி

            - சி               =     முயற்சி

            - ப்பு              =     கடுப்பு

            -               =     நடை

            - அம்             =     அகலம்

            - கை             =     வருகை

            - மை            =     பொறுமை

            - மதி             =     ஏற்றுமதி

            - வி              =     கேள்வி

            - அல்            =     சுண்டல்

            - அது            =     பொரிப்பது

 

தொழிற் பெயர் விகுதிகள்  :-

வினை அடியாகப் பிறந்து வினை நிகழ்வினை அல்லது வினை நிகழமையை உணர்த்தும் பெயர் தொழிற் பெயர் எனப்ப்டும்

      1. வினையடி  + தல்/த்தல்/அல்

      2. வினையடி + கல இடைநிலை + அது/மை

      3. வினையடி + எதிர்மறை இடை நிலை + அது/மை

என்ற மூன்று அமைப்புடையது

  •    வினையடி + தல்/த்தல்/அல்

      போ + தல்      = போதல்

      பாய் + தல்     = பாய்தல்

      படி + த்தல்    = படித்தல்

      பார் + த்தல்   = பார்த்தல்

      காண் + அல்  = காணல்

      ஓடு + அல்    = ஓடல்

  •    வினையடி + கால இடைநிலை + அது/மை

      போ +கிறு + அது              =    போகிறது

      போ + ந் + அ + மை          =   போனமை

  •    வினையடி + எதிர்மறை இடைநிலை + அது/மை

      செய் + ஆத் + அது      =   செய்யாதது

      போ + ஆ + மை       =   போகாமை    

மேல் உள்ள  ஆக்கப்பெயர்களுள்  வினை + விகுதி = பெயர் என்ற அமைப்பிலுள்ளவை தொழிற் பெயர்களுள் அடங்கும்.

 

ஏவல் வியங்கோள் வினைவிகுதிகள்  :-

  •   ஏவல்

      - ங்கள்           =     எடுங்கள்

      - உங்கள்          =     செய்யுங்கள்

  •   வியங்கோள்

      -                =     வாழ்க

      - இய             =     வாழிய

      - அட்டும்         =     பொழியட்டும்

 

சாரியைகள்  :-

 கூட்டுப் பெயராக்கத்தின் போது அல்லது பகுபத உறுப்புக்களின் பகுதிக்கும் விகுதிக்கும் அல்லது இடை நிலைக்கும் விகுதிககும் இடையில் தோன்றும் உருபு சாரியை ஆகும்.

      - அன்            =     நடந்தனன்

      - அத்து           =     மரத்து

      - அற்று           =     பலவற்றை

      - இன்            =     வீட்டிற்கு

      - அம்             =     புளியம் காய்

 

உவமை உருபுகள்  :-

போல, அன்ன, இன்ன, ஒப்ப, நிகர

      போல             =     நிலாபோன்ற முகம்

      விட              =     கண்ணனைவிட முருகன்

      பார்கிலும்          =     என்னை ப்பார்க்கிலும் கெட்டி

      காட்டிலும்         =     என்னைக் காட்டிலும் நல்லவன்


இணைப்பிடச் சொற்கள்  :-

      உம்              =   பஸ்ஸிலும் போகலாம்

      அல்லது          =   மணி 10 அல்லது 10:30 இருக்கும்.

      இல்லையென்றால் =   அவன் இல்லை என்றால் ஒரு  

                           வேலையும் நடக்காது

      இலாவிட்டால்          =

      ஆனால்          =

                     =   பணமாகவோ பொருளாகவோ

      ஆகவே          =   காய்ச்சல் இருக்கிறது ஆகவே பசி இல்லை

      ஆயினும்        =   மழைபெய்தது ஆயினும் நிலம்

                           நனையவில்லை

      எனினும்         =   விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன 

                       எனினும் நிலா ஒளி இருந்தது

   இருந்தபோதிலும்

 

சொல்லுருபுகள்  :-

      மூலம்            =     தொலைபேசி மூலம்

      கொண்டு          =     பேனாவைக்கொண்டு

      இருந்து           =     மரத்தில் இருந்து

      பற்றி              =     பிரச்சினை பற்றி

      வரை             =     சாலை வரை , ஏழு மணிவரை

 

தத்தம் பொருள் உணர்த்தும் இடைச் சொற்கள் :-

உம், ஓ, , தான், மட்டும், ஆவது, கூட, , ஆம்

1.   "உம்" -    இடைச்சொல்  :-

"எதிர்மறை சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, எண்ணல், தெரிநிலை, ஆக்கமோடு உம்மை எட்டே

(நன்.சூ.425)

எதிர்மறை சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, எண்ணல் தெரிநிலை ஆக்க்ம் என எட்டுப் பொருள் கூறும் அத்துடன்  உடனடித்தன்மை, மாற்று வழி, உறுதிப்பாடு மறுப்பு எனும் பொருள்களிலும் வரும்.

  • எதிர்மறை  :-

களவும் கற்று மற. இப் பழமொழியில் களவு என்பது கற்கத்தகாதது என்ற பொருளை தருவதால் இது எதிர்மறைப் பொருள்       ஆகும். மேலும் எதிர் பார்க்கப்படுவதற்கு மாறானதும் இதனுள்படும்.

      ( உ + ம் )       மழை பெய்தும் புழுக்கம் குறையவில்லை.

  • சிறப்பு   :-

      உயர்வு சிறப்பு என்பது உயர்ந்தவற்றுள் உயர்ந்தது

      (உ + ம்)    கவிஞர் போற்றும் கவின்

                  அரசர்களும் வாழாத ஆடம்பர வாழ்வு

      இழிவுச்சிறப்பு என்பது தாழ்ந்த வற்றுள் தாழ்ந்தது

      (உ+ம்)      நாயிநும் கடையன்

                        கொலைகாரனை விடவும் கொடியவன்

  • ஐயம்   :-

      மழை பெய்தாலும் பெய்யும்

      அவன் வெல்லினும் வெல்லும்

ஒரு நிகழ்வு நிகழ்வதை நிச்சயமாகக் கூறாமையை இது உணர்த்துகிறது எனவே இது ஐயம்.

  • எச்சம்  :-

      கண்ணனும் வந்தான்

      மீனும் சாப்பிடுவேன்

இங்கு உம் என்ற இடைச்சொல் பிரிதொன்றைத் தழுவி நிற்பதால் இதனை எச்சம் என்பர்.

  • முற்று  :-

      எல்லோரும் வந்தார்கள்

      பத்துப்பிள்ளைகளும் ஆண்

      பெயர் அனைத்தையும் உள்ள்டக்குவதால் முற்றுவினை என்பர்.

       வினாப்பெயர்களுடன் சேர்ந்தும் முற்றுப் பொருளைத்தரும்.

            யார் + உம்  =     யாரும்

            எவன் + உம் =     எவனும்

  • எண்   :-

      மூன்றும் இரன்டும் ஐந்து

      நானும், நீயும், அவனும்

இவ்வாறு எண்ணுவதற்கும் இணைப்பதற்கும் உம் பயன்படுவது எண் உம்மை என்பர்.

  • தெரிநிலை  :-

      ஆணும் இல்லை பெண்ணும் இல்லை

      இதில் ஆராய்ச்சியும் இல்லை விமர்சனமும் இல்லை.

இங்கு வெளிப்படையாக விடயத்தை கூறுவதானால் இதனை தெரிநிலை என்பர்.

  • ஆக்கம் :-

      ஒன்றே பிறிதொன்றாகவும் ஆவதை சுட்டுவது ஆக்கம் என்பர்.

      வீட்டைத்தான் அலுவலகமாகவும் பயன்படுத்துகிறேன்

      எழுதுவதுதான் அவரது தொழில்

  • உடனடித் தன்மை  :-

      மழைவிட்டதும் போகலாம்

      திருடன் என்னைக் கண்டதும் ஓடினான்

இங்கு "உம்" முதல் நிகழ்வு நடந்தது.அதனை அடுத்து நிகழும் வினை உடனடியாக நிகழ்வதை உணர்துகின்றது.

  • மாற்று வழி

இங்கு ஒரு செயலை வெவ்வேறுவழியில் செய்ய தேர்வுகள் காண்ப்படும்.

(உ+ம்) நீங்கள் பணமகவும் தரலாம் காசோலையகவும் தரலாம்.

  • உறுதிப்பாடு மறுப்பு

நிபந்தனை வினை எச்சத்துடன் உம் இணைந்து இப் பொருளை உணர்த்தும்.

      (உ + ம்) யார் கேட்டாலும் கொடுக்கமாட்டேன்

 

2.   "" - இடைச்சொல்:-

ஓகார இடைச்சொல் ஒலியிசை, வினா, உயர்வு, சிறப்பு, இழிவுச்சிற்ப்பு, எதிர்மறை, தெரிநிலை, பிரிநிலை, அசைநிலை ஆகிய எட்டுப் பொருளில் வரும் என நன்னூல் கூறும்

தற்காலத் தமிழில் பிரிநிலை பொருளில் மட்டும் ஓகாரம் வரும் இது தவிர ஐயம், திடக்குறிப்பின்மை, மிகை, இது அல்லது அது, இதுவும் இல்லை அதுவும் இல்லை போன்ற பொருளில் வரும்.

      இன்றைக்கு மழை பெய்யுமோ

      நாளைக்கு யார் வாருகிறாரோ

      இங்கு ஓகாரம் ஐயப்பொருள் தருகிறது ஓகாரம் இல்லாவிடத்து நிச்சயம் வினாப் பொருளை உணர்த்தும்.

  • திடக்குறிப்பின்மை :-

வினாப்பெயருடன் ஓ இடைச்சொல் சேரும் போது இப் பொருளுணர்த்தும்.

      யாரோ ?    எவனோ ?    எப்படியோ ?

  • பிரிநிலை :-

      நாங்களோ இன்னும் பழையகாலத்தில்

      அவனோ மகிழ்ச்சியோடு

பிறவற்றில் இருந்து ஒன்றை பிரித்துக்காட்டுவதால் இது பிரிநிலை பொருள் என்பர்

  • மிகை :-

எத்தனை,  எவ்வளவு ஆகிய வினாப்பெயர்களுடன் ஒ இடைச்சொல் இணைந்து மிகையான எண்ணிக்கையை உணர்த்தும்.

      (உ + ம்)    கூட்டத்துக்கு எத்தனையோ பேர்

                  யுத்ததில் எவ்வளவோ பொருட்கள்

  • இது அல்லது அது :-

ஒரு உடன்பாட்டு வாக்கியத்தில் பல பெயர்ச் சொற்களுடன் ஒ இடைச்சொல் வந்தால் இது அல்லது அது எனும் பொருள்தரும்.

      (உ + ம் )   கோப்பியோ தேனீரோ குடியுங்கள்

                  நானோ தம்பியோ வருவோம்

  • இதுவும் இல்லை அதுவும் இல்லை  :-

ஒரு எதிர்மறைச் சொல்லில் ஒ இடைச்சொல் இரண்டு சொல்லுடன் இணைந்து வருவது

      (உ + ம் )   நான் கோப்பியோ தேனீரோ குடிப்பதில்லை

 

3. "" - இடைச்சொல்  :-

ஏகார வினைச்சொல், தோற்றமும், வினாவும், எண்ணும், பிரிநிலையும் எதிர்மறையும், இசைநிறையும் ஈற்றசைவுமாகிய ஏழு பொருளைத்தரும்.

[ ஆருமுக நா 299 ]

தற்காலத்தில் ஏ தேற்றப் பொருளிள் (அழுத்தம்) மட்டுமே வருவதாகத் தெரிகின்றது. அத்தோடு ஒன்றின்  சுய இயக்கத்தை கூறவும் வரும்.

      ( உ + ம் )  உண்டே கடவுள் (தேற்றம்)

                  நான் நேற்றே வந்தேன் (தேற்றம்)

                  கதவு தானாகவே திறந்தது (சுய இயக்கம்)

தேற்றம் என்பது ஒரு கருத்தை உண்டென உறுதியாக அல்லது அழுத்தமாக கூறுவதைக் குறிக்கலாம்.

 

4.  "தான்" - இடைச்சொல்  :-

    தான் இடைச்சொல் அழுத்தப் பொருளில் வரும். வாக்கியத்தில் எந்தச் சொல்லுடனும் தான் வரும்.

      (உ+ம்)   நான் நேற்று ஊருக்குப் போனேன்.

               நான்தான் நேற்று ஊருக்குப் போனேன்.

               நான் நேற்றுத்தான் ஊருக்குப் போனேன்.

                     நான் நேற்று ஊருக்குப் போனேந்தான்.

5. "மட்டும்" - இடைச்சொல்  :-

    இது வரையரைப் பொருளில் வரும். இது எந்தச் சொல்லுடன் வருகிறதோ அச்சொல்லை மற்றையவற்றில் இருந்து வரையறை செய்யும்.

      (உ+ம்)       நான் மட்டும் வருவேன்.

                   நான் நேற்றுமட்டும் வந்தேன்.

                   இயலுமான வரை, குறிப்பிட்ட நேரம் வரை என்ற பொருளிலும் மட்டும் இடைச்சொல் வரும்.

 

6.  "ஆவது" - இடைச்சொல்  :-

     ஆவது இடைச்சொல் பல பொருளில் வரும்.

  • குறைந்த பட்சம்

      (உ+ம்)  கூட்டத்துக்கு பத்துப்பேராவது வருவார்களா?

              ஒரு நாளைக்குச் செலவு நூறு ரூபாயாவது வேண்டும்

  • இது அல்லது அது

      (உ+ம்)      இரவில் பாணாவது இடியப்பமாவது சாப்பிடுவேன்.

  • திடக்குறிப்பின்மை :

      வினாப்பெயருடன் இணைந்து வரும்.

      அவளாவது, அவராவது

  • நடவாமை :

ஒரு வாக்கியத்தில் எழுவாயுடனும் பயனிலையுடனும் ஆவது இணைந்து வந்தால் அந்த வாக்கியம் உணர்த்தும் நிகழ்வு நடவாமையைக் குறிக்கும்

      (உ+ம்)      மழையாவது பெய்யிரதாவது

                  அவனாவது பிடிக்கிறதாவது

  • வரிசைப் பொருள் :

     எண்ணும் பொருள்களுடன் வந்து வரிசைப் பொருள் தரும்.

      முதலாவது, இரண்டாவது, மூன்றாவது

 

7.  "கூட" - இடைச்சொல்  :-

  • குறைந்த பட்சம்:

      என்னிடம் பத்து ரூபாய் கூட இல்லை.

      அவனுக்கு கொஞ்சம் கூட அறிவில்லை

 

  • முற்றுப் பொருள்

      ஒரு நட்சத்திரம் கூட இல்லை.

      ஒரு நாள் கூட இல்லை.

  • எச்சம் தழுவிய எதிர்மறை:

      நான் கூடப் பயந்து விட்டேன்.

      உனக்குப் பாடக்கூட தெரியுமா.

 

8.  "" - இடைச்சொல்  :-

   ஆ வினாப் பொருளில் வரும் இடைச்சொல்லாகும். ஒரு வாக்கியத்தில் எந்த சொல்லுடன் இது இணைந்து வருகிறதோ அது வினாவாகும்.

(உ+ம்)     கண்ணனா நேற்று கொழும்புக்குப் போனான்?

          கண்ணன் நேற்றா கொழும்புக்குப் போனான்?

          கண்ணன் நேற்று கொழும்புக்கா போனான்?

          கண்ணன் நேற்று கொழும்புக்குப் போனானா?

 

9.  "ஆம்" - இடைச்சொல்  :-

   -அல் ஈறுபெற்ற தொழிற்பெயரை பயனிலையாகக் கொண்ட வாக்கியத்தின் இறுதியில் வந்து அனுமதி, சாத்தியப்பாடு, பொருத்தப்பாடு முதலிய பொருள்களை உணர்த்தும்.

      அனுமதி           =     நீங்கள் இனிப் போகலாம்.

      சாத்தியப்பாடு      =     நாளைக்கு மழை பெய்யலாம்

      பொருத்தப்பாடு     =     இந்த நூலுக்கு முதல் பரிசு வழங்கலாம்.

பிறர் வாயில் கேட்ட தகவலாக ஒரு செய்தியைக் கூட இவ்விடைச் சொல் பயன்படும்.

      நீங்கள் தானாம் அடுத்த தலைவர்

      கண்ணன் அமெரிக்காவுக்குப் போகிறானாம்.

10.  

  •       ", , "எனும் மூன்று இடைச் சொற்களும் வினாப் பொருளில் வரும்.

  •       ", யா, "எனும் மூன்றிடைச் சொற்களுக்கும் வினாப் பொருளைத் தரும்.

  •       "மற்று" எனும் இடைச்சொல்

            "மாற்றிவா நல்வினை...."

  •       "கொல்"எனும் இடைச் சொல்

            "கற்றதனா லாய பயனென்கொல்"

  •       "என்று, என், ஒடு"இடைச் சொற்கள்

            "பகை பாவாமச்சம் பழியென நான்கு"

            "பொருள் கருவி காலம் வினையிட னொடைந்து"

           
"தமிழ் இனிமை கண்டால் எளிது"

 ஆசிரியர் :-  Mr.M.W.M.Ramzy      (National Dip. Teacher)  

தரம் 11

தரம் 10

NIE | Ministry of Education  | School Net | Department Examination 

AL-Mubarak Central College
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk
Home | Al-Mubarak | Ramzy | School Pic Gallery | Staff | For Student | For Teacher | Exam paper | Others
Make a Free Website with Yola.