நாட்டார் பாடல்

நாட்டார் பாடல் அல்லது நாட்டுப்புற பாடல் எனப்படுவது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற்களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும். நடுகை ஏற்றம் போன்ற கூட்டுப் பணிகளின்போது பணியாளர்களிடையே ஓரிசைவை உண்டுபண்ணுவதிலும் இவற்றின் பங்கு உண்டு. இவை பெரும்பாலும் அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளின் மீதான நாட்டார் கருத்தை எதிரொளிக்கும்.

இவ்வாறான பாடல்கள் வாய்மொழி மரபாக கையளிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலும் அதிக மாற்றத்துக்கு இலக்காகாமல் பேணப்படுகின்றன. அதேவேளை இவற்றின் இயற்றுனர்கள் என்று எவரையும் குறிப்பிடமுடியாத வகையில் இவை பொதுவழக்கில் பயன்பாட்டிற்கு வந்துவிடுகின்றன.

பண்புகள்

நாட்டார் பாடல் என்பது "அதன் உருவாக்கத்தில் இல்லை, அதன் பரவுவகையில்தான் உள்ளது" என்பது சில ஆய்வர்களின் கருத்து. அதாவது, ஒரு எழுத்தறிவுபெற்ற கவிஞர் முறைப்படி ஒரு கவிதை எழுதி அது நாட்டாரின் விருப்பத்திற்கேற்பவும், அவர்களது வாழ்வினுடன் தொடர்புடையதாகவும் அமைந்து அவர்களுடைய பொதுப்பயன்பாட்டிற்கு வருமானால் அதையும் நாட்டார் பாடல் என்று குறிப்பிடலாம்.

இதன் கவர்ச்சியான இசை மற்றும் பயிற்சி பெறாதவர்களாலும் பாடக்கூடிய எளிமையான ஸ்தாயி (சுர நிலை) எல்லையும், மெட்டும், சாதாரண நடையிலும், கதை செப்பும் நடையிலும் அமைந்தமையே அதன் சிறப்பிற்குக் காரணமாகும். பாடுவோர் குரலில் இருந்து உரத்த தன்மையில் ஒலி வெளிப்படுதல் இதன் மற்றொரு இயல்பு. அன்றாடப் பணியுடன் கலந்த பாடல் இசையாக அமைத்துவிடுகின்றனர். மேலும் மூத்தோர் பாடிய பாடல்களாக இருப்பதாலும் பெயர் தெரிவதில்லை. சூழ்நிலைக்கேற்ப பாடல்களை இயல்புபடுத்திப்பாடும் தன்மையும் இந்நாட்டார் பாடல்களில் காணப்படுகிறது.

வகைகள்

நாட்டார் பாடலை நாட்டுப்பாடல், தெம்மாங்கு, பாமர ஜனகானம், பொதுஜனகானம், கிராமியபாடல், எனப் பலவாறு அழைப்பர். பழங்குடிகள் தம் கருத்துக்களையும், இன்ப துன்ப உணர்வுகளையும் பிறருக்குப் புலப்படுத்தக்கூடியவாறு மொழி வளர்ச்சி பெற்றிருக்காத சூழ்நிலையில் ஏதோ ஒரு வகையில் ஓசை முறைகளையும் பயன்படுத்தி இருக்கலாம். மொழி துணையாக வந்த போது முதற்பாடல் தோன்றியிருக்கக் கூடும். ஒருவர் ஓர் அடியைப்பாட, மற்றொருவர் மற்றைய அடியைப்பாட வினா விடையாகவும் நாட்டார் பாடல்கள் அமைந்தன.

சூழலையும் குறிக்கோளையும் பொருத்து நாட்டார் பாடல்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

 • தாலாட்டு
 • ஒப்பாரி
 • தொழிற்பாடல்
 • கதைப்பாடல்

 நடுகைக் களத்தில் காதல் பேசும் வகையில் அமைந்த ஒரு எடுத்துக்காட்டுப் பாடல்.

நாலு மூலை வயலுக்குள்ளே
நாத்து நடும் பொம்பிளே
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு
 
நண்டு சாறு காய்ச்சி விட்டு
நடு வரப்பில் போற பெண்ணே - உன்
தண்டைக் காலு அழகைக் கண்டு
கெஞ்சுறானாம் அஞ்சு மாசம்
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

பெண்டுகளே! பெண்டுகளே!
தண்டு போட்ட பெண்டுகளே! - உன்
கொண்டை அழகைக் கண்டு
கெஞ்சுறானாம் அஞ்சு மாசம்
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

 ஒப்பாரிப் பாடல்

ஒப்பாரி என்பது கிராமிய மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று. கிராமத்து மக்கள் வாழ்க்கையில் இசையானது பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. மனிதரைக் கவரவல்ல உணர்ச்சி மிக்க பாடல்கள் தாலாட்டும் ஒப்பாரியும் ஆகும். மனித வாழ்க்கையின் தொடக்கத்தில் பாடப்படுவது தாலாட்டு ஆகும். வாழ்க்கையின் முடிவில் பாடப்படுவது ஒப்பாரி. தாய், தந்தை, கணவன், பிள்ளை, உற்றார், உறவினர் எவரேனும் இறந்து விட்டால் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்ப உணர்வே ஒப்பாரியாக வெளிப்படுகின்றது.


இறந்தவர்களின் வரலாறு பற்றித் தெரியாதவர்கள் அப்பாடல் மூலம் வரலாற்றினை அறிய முடியும். ஒப்பாரிப் பாடல்களின் இசை, விளம்பமும் மத்யமும் கலந்த ஒரு லய அமைப்பில் முகாரி, ஆகிரி முதலான இராகச் சாயலுடன் விளங்குகின்றது.


நாட்டுப்புறங்களில் இழவு வீடுகளில் உறுமி எனப்படும் ஒரு இசைக்கருவி இசைக்கப்படும். இன்னைக்கி உறுமிச் சத்தம் கேட்டதென்ன எனப் புலம்பும் ஒரு ஒப்பாரிப் பாடலில் இருந்து, உறுமி சில வட்டாரங்களில் இறப்புக்கான ஒரு குறியீட்டு இசைக்கருவியாக பயன்படுத்தபட்டமை தெரிய வருகின்றது.

 

மகனை பலிகொடுத்த தாய்

பிள்ளைகளை பறிகொடுத்த தாய்களின் ஒப்பாரி.


நீ போருக்கு போனடத்தை 
போராடி மாண்டாய் ஐயா
மகனே
பாரத்துவக்கெடுத்தோ
உங்களுக்கு
பயந்தவெடி வச்சானோ
உங்களுக்கு பெரிய துவக்கொடுத்தோ
உங்கள பேசாமல் சுட்டெறிந்தான்
மகனார்
உன்ன சந்தியல கண்டடத்தை
உன்னைபெத்த கறுமி
தலைவெடித்துப் போறனையா
மகனார் நீகப்பலில வாராயெண்டோ
நாங்க கடலருகில் காத்திருந்தோம்

மகனே நீ 
இருந்த இடத்தைப் பார்தாலும்
இரு தணலாய் மூளுதையா
நீ படுத்த இடத்தை பார்தாலும் 
பயம் பயமாய் தோன்றுதடா
மகனே
உன்னைப் பெற்ற கறுமி நான்
இங்க உப்பலந்த நாழியைப்போல்
நீ இல்லாம
நாள்தோறும் உக்கிறனே

 


தாயாரின் ஒப்பாரி


பொன்னான மேனியிலே - ஒரு
பொல்லாத நோய் வந்ததென்ன
தங்கத் திருமேனியிலே - ஒரு
தகாத நோய் வந்ததென்ன...


மனைவியின் ஒப்பாரி

முத்து பதித்த முகம்
முதலிமார் மதித்த முகம்
தங்கம் பதித்த முகம்
தரணிமார் மதித்த முகம்...

தாலாட்டுப் பாடல்

குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தலாட்டு ஆகும். தலாட்டு நாட்டார் பாடல் வகைகளில் ஒன்று. வாழ்மொழி இலக்கியங்களாக வழங்கிவந்த தலாட்டுக்கள் நாட்டாரியல் ஆய்வாளர்களால் சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.


தாலாட்டுப் பாடல்கள் கிராமிய மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று.


தாலாட்டுப் பாடல்கள் இனிமையான இசையை உடையன. அவ்விசையில் மயங்கி குழந்தை மெய்மறந்து தூங்குகின்றது. "தால்" என்பது நாவைக் குறிக்கும். நாவினால் ஓசை எழுப்பி குழந்தையை உறங்க வைப்பதே தாலாட்டுதல் எனவும் கூறுவர். தாய் தன் குழந்தையை மடியிலோ, தோளிலோ, கைகளிலோ, தொட்டிலிலோ வைத்து ஆட்டிய வண்ணம் தாலாட்டுவதே வழக்கம். ஆராரோ ஆரிரரோ என்ற சந்தத்தின் மூலம் ஓசை எழுப்புவதால் இது ஆராட்டுதல் என்றும் சொல்லபடும்.


தாலாட்டின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் ராராரோ, ஆராரோ, ஆரிரரோ என்ற பதங்கள் பயன்படுத்தப் படுகின்றன. நீலாம்பரி என்ற இன்பமூட்டும் இராகத்திலேயே தாலாட்டுப் பாடல்கள் பெரும்பாலும் பாடப் படுவதுண்டு. எனினும் யதுகுலகாம்போஜி, சகானா, ஆனந்தபைரவி போன்ற இராகங்களிலும் இவை இசைக்கப் படுகின்றன. தாலாட்டுப் பாடல்களில் குழந்தையின் அருமை, அதன் விளையாட்டுப்பொருட்கள், மாமன் பெருமை, குலப் பெருமை போன்றவை கூறப்படுகின்றன. இத்தாலாட்டுப் பாடல்களில் தத்ரூபமான உவமை, உருவக அணிகள் கையாளப்பட்டுள்ளன.

கொவ்வை இதழ் மகளே -  என்
குவிந்த நவரத்தினமே
கட்டிப் பசும்பொன்னே என்
கண்மணியே கண் வளராய்

என்ற தாலாட்டுப் பாடலில் குழந்தையானது நவரத்தினமாகவும், பசும்பொன்னாகவும், கண்மணியாகவும் உருவகிக்கப்பட்டுள்ளமை படித்து இன்புறத்தக்கது. பக்தி இலக்கியங்களிலும் இறைவனை குழந்தையாக பாவித்து தலாட்டுக்கள் பாடப்பட்டுள்ளன.

ஆராரோ அரிரரோ


ஆராரோ அரிரரோ
அரிரரோ அராரோ

அரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு

கண்ணே யடிச்சரார்
கற்பகத்தைத் தொட்டாரார்
தொட்டாரைச் சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்

மாமன் அடித்தானோ
மாதளங் கம்பாலே
அண்ணன் அடித்தானோ
ஆவாரங் கொப்பாலே
பாட்டி அடித்தாளோ
பால் வடியும் கம்பாலே

ஆராரோ அரிரரோ
அரிரரோ அராரோ

அரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு

விளையாட்டுப் பாடல்

சிறுவர்கள் விளையாடும் பொழுது பாடப்படும் பாடல்கள் விளையாட்டுப் பாடல்கள் எனப்படும். பாட்டும் விளையாடும் ஒன்றிணைந்து இருக்கும். இப்பாடல்கள் நாட்டார் பாடல் வகைகளில் அடங்கும்.

கிட்டிப் புள்ளு

ஆலையிலே சோலையிலே

ஆலங்காடிச் சந்தையிலே

கிட்டிப் புள்ளும் பம்பரமும்

கிறிக்கியடிக்கப்

பாலாறு, பாலாறு, பாலாறு.


கிள்ளுப்பிராண்டி

கிள்ளிக் கிள்ளிப் பிறாண்டி

கீயா மாயாப் பிராண்டி

கொப்பன் தலையில் என்ன பூ...

{முருங்கைப்பூ)

முருங்கைப்பூவைத் திண்டவளே

முன்னடிக் கஞ்சி குடிச்சவளே

பாதி விளாங்காய் திண்டவளே

பாவட்டங் கையை --க்-கு.

வினா விடை

என்ன அன்னம் - சோத்தன்னம்

என்ன சோறு - பழஞ்சோறு

என்ன பழம் - வாழைப்பழம்

என்ன வாழை - திரி வாழை

என்ன திரி - விளக்குத்திரி

என்ன விளக்கு - குத்துவிளக்கு

என்ன குத்து - இந்தக்குத்து


தமிழில் நாட்டார் பாடல்கள்

தமிழில் முதலில் எழுந்த இலக்கியமான சிலப்பதிகாரமும் ஒரு பழைய கதைப்பாடலை ஆதாரமாகக் கொண்டே எழுந்திருக்க வேண்டும். சங்ககால இலக்கியமான ஐந்திணை தழுவிய அகப்பாடல்களுக்கும், நாட்டு மகளிடையே வழங்கிய காதற்பாடல்களே முன்னோடிகள் எனலாம். சிலப்பதிகாரத்தில் வரும் கானல் வரி, வேட்டுவ வரி, குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை என்பனவும் நாட்டார் இசைமரபின் தொடர்ச்சியாகவும் மக்கள் வாழ்க்கை முறையில் பெறும் முக்கியத்துவத்தைத் தெளிவு படுத்தும் விதமாகவும் இருக்கின்றன. இளங்கோவடிகளின் துன்ப மாலைப் பகுதியில் வழங்கும் பாடல் கூறுகளும், யாழ்ப்பாண இசை மரபில் வழங்கும் ஒப்பாரிப்பாடல்களும் ஓசை அமைப்பில் ஒருமைப்பாடு உடையன. பெரியாழ்வார் கண்ணனை குழந்தையாக உருவகப்படுத்திய தாலாட்டு தமிழ் நாட்டுத் தாய்மார்களிடையே வழங்கி வந்த தாலாட்டுப் பாடல்களையொத்தே உருவாக்கப்பட்டது.

நாட்டுபாடலில் ஈடுபாடு காட்டிய பாரதியார் தமது பல்வேறு பாடல்களில் நாட்டுப்பாடலின் அமைப்பையும் சந்தத்தையும் பயன்படுத்துகின்றார். (-டு) பாஞ்சாலி சபதம். இவருக்கு முன் கோபாலகிருஷ்ண பாரதியார், இராமலிங்க சுவாமிகள் முதலியோர் கும்மியாட்டம் போன்றவற்றிற்கான நாட்டுப்படல்களை இயற்றியுள்ளனர். பெரும்பாலும் எழுத்தறிவு பெறாத பொதுமக்களால் இயற்றப்பெறுவதால் நாட்டார் பாடல்களில் வட்டார மொழி வழக்குகளே மிகுந்து காணப்படும். மேலும், பிற இலக்கியங்களைப் போன்றே நாட்டார் பாடல்களில் அவற்றின் காலத்தில் நிகழ்ந்த பெருநிகழ்வுகளும், இருந்த சூழல்களும், வாழ்க்கைமுறைகளும், பண்பாடும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். சில வேளைகளில் பிற இலக்கியங்களில் காணப்படாத காலப்பதிவுகளும் மிகுந்து காணப்படும். எடுத்துக்காட்டாக, தாது ஆண்டுப் பஞ்சத்தின்போது தமிழர் திருமணம் முதலிய சடங்குகள் எவ்வாறு இருந்தன போன்ற தகவல்களையும் இவற்றில் காணலாம்.

ஆய்வுகள்

தமிழ் நாட்டார் பாடல்களைப் பற்றி பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இவற்றுள் நா.வானமாமலை அவர்களின் ஆய்வு குறிப்பிடத்தக்கது. அவர் வட்டாரங்கள்வாரியாக தொகுத்த நாட்டார் பாடல்களை தமிழர் நாட்டுப் பாடல்கள் என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார். பின்னர் விசயலட்சுமி-நவநீதகிருட்டிணன் தம்பதியர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நிகழ்த்து கலைகள் துறையின் உட்பிரிவான கலை வரலாறு மற்றும் நாட்டார் கலைகள் துறையின்கீழ் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

நாட்டுப்புற இசை

கிராமிய இசை கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட ஒருவகை இசையாகும். இவற்றுக்கு நாடோடி இசை, நாட்டுப்பாடல்கள் என்ற பெயர்களும் உண்டு.

கிராமிய இசை வகைகள்

தொட்டில் முதல் சுடுகாடு வரை கிராமியப்பாடல்கள் பாடப்படுகின்றன. கிராமியப்பாடல்கள் பலவகைப்படும்:

1.      ஒழுக்கப்பாட்டு, வேதாந்தப்பாட்டு, பழமொழிப்பாட்டு, இறைவணக்கப்பாட்டு

2.       நலுங்கு, தாலாட்டு, ஆரத்தி, ஊஞ்சல், மசக்கை, நோன்பு, சடங்கு, ஒப்பாரி. இவை குறிப்பிட்ட காலங்களில் பாடப்படுவன.

3.      புதிர்ப்பாட்டு, கோமாளிப்பாட்டு, கும்மி, கோலாட்டம் முதலியவை ஓய்வுகாலங்களில் மன உற்சாகத்திற்காகப் பாடப்படுபவை.

4.        தொழிற்ப்பாட்டு, உழவுப்பாட்டு, நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, சுண்ணாம்ம்பு இடிப்பார்பாட்டு, தெம்மாங்கு முதலியவை வேலை செய்யும்போது பாடப்படுபவை.

5.       மழைப்பாட்டு, பிரார்த்தனைப்பாட்டு, பூசாரிப்பாட்டு, புராணப்பாட்டு, விழாப்பாட்டு, சிகிச்சைப்பாட்டு, சுகாதாரக் கும்மிப் பாட்டு என்பவை சில சந்தர்ப்பங்களுக்காகப் பாடப்படுபவை.

கிராமிய இசைக்கருவிகள்

 • இழவு வீட்டில் நாட்டார் இசை (கோப்பு விவரம்)
  • எட்டையாபுரத்தில் மரணம் நிகழ்ந்த வீட்டின் முன் மறைந்தவருக்கு மதிப்பு செய்யும் வகையிலும் அவரது உடல் கிடத்தி இருக்கும் வரை விழித்திருந்து காக்கும் வகையிலும் கருவிகள் இசைக்கப் படுகின்றன.
  • ஒளிக்கோப்பை பார்ப்பதில் சிக்கலா? பார்க்கவும் ஊடக உதவி.

 • எக்காளம்
 • திருச்சின்னம்
 • கஞ்சிரா
 • பூசாரிக் கைச்சிலம்பு
 • தவண்டை
 • உடுக்கை
 • தம்பட்டம்


ஊடகங்களில்

விசயலட்சுமி-நவநீதகிருட்டிணன் ஆகியோர் ஒலி நாடாக்கள் வழியாகவும் நிகழ்ச்சிகள் ஊடாகவும் நாட்டார் பாடல்களைப் பரப்பினர். பின்னர் புசுபவனம் குப்புசாமி-அனிதா தம்பதியினரும் பொது நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படப் பாடல்கள் வழியாகவும் நாட்டுப்புறப் பாடல்களைப் பரப்பினர். பரவை முனியம்மா, கொல்லங்குடி, கருப்பாயி ஆகியோர் குறிப்பிடத்தக்க வகையில் திரைப்படங்கள் மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.

திரையிசையில் கிராமிய இசை

"மண்வாசனை வீசும் கிராமிய இசையை தமிழகமெங்கும் தவழவிட்டவர் இளையராஜா. கிராமிய மெட்டு, கிராமிய இசைக் கருவிகள் ஆனால் மேற்கத்திய பாணியில் வாத்தியங்களின் ஒருங்கிணைப்பு என்று இசைக்கலைஞனின் கற்பனையில் உச்சத்தில் நின்று பாடல்களை வழங்கியவர் இளையராஜா.


தரம் 11

தரம் 10

NIE | Ministry of Education  | School Net | Department Examination 

AL-Mubarak Central College
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk
Home | Al-Mubarak | Ramzy | School Pic Gallery | Staff | For Student | For Teacher | Exam paper | Others
Make a Free Website with Yola.