ஒட்டக்கூத்தர்

ஒட்டக்கூத்தர் என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரம சோழன் (ஆட்சி 1120-1136), இரண்டாம் குலோத்துங்கன் (ஆட்சி 1136-1150), இரண்டாம் இராசராசன் (ஆட்சி 1150-1163) ஆகிய மூன்று சோழர்கள் காலத்திலேயும் வாழ்ந்தவர். இவர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் (இன்றைய திருவரம்பூரில்) பிறந்தார். திருநாவுக்கரசர் பாடிய திருவெறும்பியூர் என்பதுவும் இவ்வூரே. இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கது.

நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர் என்றும், சில நூற்றாண்டுகள் பின் வாழ்ந்தவர் என்றும் கருத்துக்கள் உள்ளன. இதே போல கம்பரும் ஒட்டக்கூத்தருக்குப் பின் வாழ்ந்தவர் என்னும் கருத்து உள்ளது.

ஒட்டக்கூத்தரின் நூல்கள்

  • காங்கேயன் நாலாயிரக் கோவை
  • மூவர் உலா
  • குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
  • ஈட்டி எழுபது
  • அரும்பைத் தொள்ளாயிரம்
  • தக்கயாகப் பரணி
  • கலிங்கத்துப் பரணி

இவையன்றி எதிர்நூல், கண்டன் கோவை, தில்லையுலா என்னும் இன்னும் பல நூல்கள் இயற்றியுள்ளார்.

ஒட்டக்கூத்தர் பற்றிய நூல்கள்

  • புலவர் பேரரசர் ஒட்டக்கூத்தர், புலவர் பி.மா.சோமசுந்தரம், சேக்கிழார் பதிப்பகம், 1987. பக்.1-149
  • நான் கண்ட ஒட்டக்கூத்தர், சிறீநிவாச ரங்கசுவாமி, நாம் தமிழர் பதிப்பகம், 2004, ப்க்.1-90.


கம்பர்

கம்ப இராமாயணம் பாடிப் பெரும் புகழ்பெற்றவர் கம்பன். தமிழ் இலக்கியத்தில் கம்ப இராமாயணமே மிகப்பெரிய இதிகாசம். வால்மீகியைப் பின்பற்றி எழுதியிருப்பதாகக் கம்பரே சொல்லுகிற போதிலும், கம்பராமாயணம் சமஸ்கிருத மூல நூலின் மொழிபெயர்ப்பு ஆகாது; அதன் தழுவலும் இல்லை; கதை நிகழ்ச்சிகளைச் சொல்லுகிற பொழுதிலும், அதன் முக்கிய பாத்திரங்களைப் படைக்கும் முறையிலும், கம்பன் தனித்த உத்திகளை வால்மீகியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கையாளுகிறான். ஆழமான கவிதை அனுபவத்தையும் புலமைத் திறனையும் கற்பனை ஆற்றலையும் கம்பனின் கைவண்ணமாகப் பார்க்கிறோம்.
எத்தனையோ பெரும் புலவர்கள் இந்திய மொழிகளையும் கீழைநாட்டு மொழிகளையும் இராம கதை எழுதிப் பெருமைப் படுத்தியிருக்கிறார்கள். அவர்களைப் போலவே கம்பனும் தன்னுடைய கதையில், அதன் வருணனையில் தன் காலத்து நிகழ்ச்சிகளையும் தான் வாழும் தமிழ்நாட்டின் சாயலையும் இடையிடையே புகுத்துகிறான் அல்லது படம் பிடித்துக் காட்டுகிறான். எனவே அவன் காட்டும் கோசலநாடு சோழநாடே என்று கூறலாம். நிலாவின் பெருமையை எடுத்துரைக்கும் பொழுது அவனுக்கு ஆதரவு வழங்கிய வள்ளலான திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் புகழ் போல, நிலவின் ஒளியும் எங்கும் பரவியிருந்தது என்று சொல்லி தன் வாசகர்களைக் கம்பன், காந்தம் போல தன்பாலும் தன்னைப் புரந்த(ஆதரவளித்த) வள்ளலின் பாலும் ஈர்க்கிறான். சமஸ்கிருத மொழியில் எவ்வாறு சொல்வன்மை பெற்றிருந்தானோ அவ்வாறே, கம்பன் தமிழ் மொழியிலும் சொல்வன்மை(நாவன்மை) பெற்றிருந்தான்.

சில சமயம், கம்பனும் ஏனைய தமிழ்ப்புலவர்கள் போல, பாவியல் மரபில் சிக்கிக் கொள்கிறான்; அவற்றின் போக்குக்குக் கட்டுப்பட்டு விடுகிறான். சான்று: மிதிலைக்கு இராமன் வந்தவுடன் எதிர்பாராத விதமாக இராமனும் சீதையும் சந்தித்துவிடும் சந்தர்ப்பத்தில் அவர்களுடைய உணர்ச்சிகள் எவ்வாறு இருந்தன என்பதை, மிக விரிவாக விவரிக்கிறான். இராமனுடைய மோதிரத்தை அநுமான், சீதையிடம் கொடுத்த பொழுது சீதைக்கு இருந்த உணர்ச்சிகளையும் கம்பன் விவரிக்கிறான்; கணவனுடன் மீண்டும் கூடி விட்டது போலச் சீதை நினைத்து மகிழ்ந்தாள் என்று மட்டும் வால்மீகி சொல்லியிருக்கிறான். கம்பன் அதோடு நிறுத்தவில்லை, அதை இன்னும் விரிவாகக் கூறுகிறான். ஆனால், தசரதனுடைய அசுவமேதயாகம் முதலியவற்றை வால்மீகி சொல்வதைவிடச் சுருக்கமாகவே கம்பன் தெரிவிக்கிறான்.

கம்பனைப் பற்றிய கட்டுக்கதைகள்

கம்பனைப் பற்றிய பல கட்டுக்கதைகள் உண்டு. அவற்றிலிருந்து சில உண்மைகள் நமக்குத் தெரியவருகின்றன. அவையாவன: அவன் தகப்பன் பெயர் ஆதித்தன்; பிறந்த ஊர் தஞ்சை மாவட்டம் மாயூரம் வட்டம் திருவழுந்தூர் நாட்டிலுள்ள மூவலூர்; சாதியால் உவச்சன்;[1] புதுவையில் திரிகார்த்த சிற்றரசனாக விளங்கிய சரராமன் என்ற சடையப்ப வள்ளலால் பாராட்டப்படும் வாய்ப்பு கம்பனுக்கு தன் இளமையிலேயே ஏற்பட்டது. இந்த வள்ளல் பெயர் விக்கிரம சோழன் உலாவிலும், மூவலூரிலும் திருக்கோடிக் காவலிலும்(ஆண்டு குறிப்பிடாமல் உள்ள)கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. இவன் கங்க வமிசத்து சேதிரையன் என்று இக்கல்வெட்டுக்களில் சொல்லப்பட்டிருக்கிறது. கம்பனை அவன் காலத்துச் சோழ அரசனும் பாராட்டி அவனுக்கு கம்பநாடு என்று பெயரிடப்பட்ட பெருவாரியான நிலத்தை அன்பளித்தான்; கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தையும் சோழ அரசனே அவனுக்கு வழங்கினான்.

அவன் இராமாயணத்தை எழுதினான், அந்தக் காவியத்தில் அதன் கருப்பொருளில் அவனுக்கு இருந்த பக்தி அளவு கடந்தது. அதனாலேயே இதைத் தமிழில் எழுத முன்வந்தான். இராமன் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பி வந்து முடிசூட்டிக் கொள்ளும் வரை மட்டுமே கம்பன் எழுதியது எனினும், உத்தர காண்டம், ஒட்டக்கூத்தனாலோ அல்லது வாணிதாசன் என்ற வாணியன் தாதன் என்பவனாலோ எழுதப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிக் கூறப்படும் விவரங்கள் அவ்வளவு நம்பகத்தக்கவை அல்ல. திருவொற்றியூரில் சதுரானன பண்டிதருடைய சைவமடத்தில் வள்ளி என்ற தாசியைச் சந்தித்து அவள் மீது கம்பன் காதல் கொண்டானாம். வள்ளியின்பால் கம்பன் கொண்ட காதலையும் அவனைக் காதலிக்கும் மற்றொருத்தியிடம் அவனுக்கு ஈடுபாடு இல்லாததையும் "தமிழ் நாவலர் சரிதை"யில் சில செய்யுள்கள் தெரிவிக்கின்றன. பாண்டியன், காகதிய ருத்திரன் உட்பட்ட தன் காலத்திய அரசர்கள் எல்லோராலும் கம்பன் பாராட்டப் பெற்றான். இவனுடைய பெரும் புகழ்க்கண்டு சோழ அரசனே பொறாமையடைந்து, இவனை கொன்றுவிட சதி செய்ததாகவும், தானே இருந்து அவனைக் கொலை செய்ததாகவும் கட்டுக்கதைகள் உண்டு. இவற்றை சரிபார்க்க ஆதாரங்கள் இல்லை.

கம்பனின் காலம்

கம்பனின் காலத்தைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் உண்டு ஒட்டக்கூத்தன், சேக்கிழார் ஆகியோருக்கு அவன் சமகாலத்தவன் அல்லது அவர்களுக்கு அடுத்த தலைமுறையினன் என்று உறுதியாகச் சொல்லலாம். சடையப்ப வள்ளலின் பெயர் இடம்பெற்றுள்ள கல்வெட்டுக்களில் உள்ள லிபியும் தியாக மாவிநோதன் என்பவனுக்கு உரிய சோழநாடு என்று கம்பன் சொல்லியிருப்பதும் இந்தக் கருத்தை உறுதிபடுத்துகின்றன. தியாக மாவிநோதம் என்பது மூன்றாம் குலோத்துங்கனின் பட்டப் பெயர்களுள் ஒன்று. சீவக சிந்தாமணியின் எதிரொலியையும் கம்பன் காவியத்தில் பார்க்க முடிகிறது. எனவே இது சீவக சிந்தாமணியின் காலத்தை அடுத்தது கம்பனின் காலம் என்று சொல்லலாம்.


இராமாயணம் தவிர ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, மும்மணிக்கோவை(இப்போது மறைந்துவிட்டது) ஆகியவற்றை கம்பன் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. மும்மணிக் கோவையை விமர்சனம் செய்த வாணியந்தாதன், கம்பனின் கவிதையைத் தாக்கியுள்ளான். ஏரெழுபது, திருக்கை வழக்கம் இரண்டும் உழவுத் தொழிலில் ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கும் வேளாள மரபுக்கு ஏற்றம் தர எழுதப்பட்டவை. ஏரெழுபது ஒரு பேரவையில் படித்து அரங்கேற்றப்பட்டது. அவ்விழாவில் சடையன்(சடையப்ப வள்ளல்) மகன் சேதிராயன் பாம்பு கடியால் இறந்தான். உடனே, கம்பன் இரண்டு வெண்பாக்கள் பாடி உயிர்ப்பித்தான் என்றும் செவிவழிச் செய்தி உள்ளது.


இராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றிய போது, அங்குப் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதப் பெருமாளை வேண்டி ஒரு அந்தாதியும் கம்பர் இயற்றினார். தன் பக்தர்களுள் பிரியமான சடகோபர் மீது 100 பாடல்கள் பாடவேண்டுமென்று திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கும் பெருமான், கம்பனுக்கு கட்டளையிட்டாராம். சிற்றிலக்கியங்கள் சிறு நூல்கள் ஆகியவற்றை நாடறிந்த பெரும் புலவர்கள் இயற்றினார்கள் என்று சொல்லி அவற்றுக்கு பெருமை தேடுவது இந்திய இலக்கியங்களுக்கு பொதுவான மரபு. இந்த இரு நூல்களுள் பொருளாழமோ இலக்கியச் சிறப்போ மருந்துக்கும் இல்லை. எனவே அவை கம்பனின் படைப்பு என்ற கருத்து ஒப்புக்கொள்ளத் தக்கதல்ல.

இவரது நூல்கள்

  • சடகோபர் அந்தாதி
  • சரசுவதி அந்தாதி
  • திருக்கை வழக்கம்
  • கம்பராமாயணம்

சடையப்ப வள்ளல்

சடையப்ப வள்ளல் கம்பரின் புரவலர். கம்பன் காவியம் பாடப்பட்ட காலத்தில் சோழப் பேரரசனின் ஆதரவு இல்லாமல் சடையப்ப வள்ளல் ஆதரவுடன்தான் பாடப்பட்டது. அவரைப் புகழ்ந்துக் கம்பர் 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் தன் ராமாயணத்தில் எழுத, மற்றப் புலவர்கள் ஆயிரத்துக்கு ஒரு பாட்டில் குறிப்பிட்டால் போதும் என்றுக் கூறிவிட, கம்பர் இவ்வாறுக் கூறுவார். "சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் கூறியபடி அவர் 'ஆயிரத்தில் ஒருவர்' ஆகிறார். அப்படியே செய்கிறேன்."

சடையப்ப வள்ளலின் சொந்த ஊர் திருவெண்ணெய் நல்லூர். இவரின் சமாதி இன்றும் தஞ்சைமாவட்டம் கதிராமங்கல்தில் காணப்படுகிறது.கம்பராமாயணம் கம்பர் இயற்றிய உடன் கம்பர் வரும் போது அவருக்கு நெற்கதிர்வேய்ந்த பந்தலிட்டு இவர் வரவேற்பு அளித்ததால் அவ்வூருக்கு இப்பெயர் வழங்கப்பட்டது. ஈழத்தில் பஞ்சம் வந்தகாலத்தில் தமிழகத்தைச் சார்ந்த சடையப்ப வள்ளல் என்பார் கப்பல்களில் உணவுப்பண்டங்களை அனுப்பி வைத்தார் என்று வரலாறு சொல்கிறது.

தரம் 11

தரம் 10

NIE | Ministry of Education  | School Net | Department Examination 

AL-Mubarak Central College
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk
Home | Al-Mubarak | Ramzy | School Pic Gallery | Staff | For Student | For Teacher | Exam paper | Others
Make a Free Website with Yola.