சிறுகதை எழுதுவது எப்படி?
[அவ்வப்போது ஏதாவது எழுத முயல்பவர்களுக்காகவும் இளம் எழுத்தாளர்களுக்காகவும் இக்குறிப்புகள் அளிக்கபப்டுகின்றன. சிங்கப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பில் ஆகஸ்ட் 2006 -ல் நிகழ்ந்த சிறுகதைப் பயிற்சிப் பட்டறையில் நடத்திய பாடத்தின் வரிவடிவம் இது.]
சிறுகதை என்றால் என்ன?
‘சிறுகதை’ என்ற சொல் short story என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு. இச்சொல்லை வைத்து சிறுகதை என்ற வடிவததை புரிந்துகொள்ளக் கூடாது. இது சிறுகதை என்ற வடிவம் உருவாகி வந்த ஆரம்ப நாட்களில் போடப்பட்ட ஒரு பொதுப்பெயர் மட்டுமே.
அதாவது சிறுகதை என்றால் ‘சிறிய கதை’அல்ல. எல்லா சிறிய கதைகளும் சிறுகதைகள் அல்ல. சிறுகதை என்பது ஒரு தனித்த இலக்கிய வடிவம். அதற்கு தனியான வடிவச்சிறப்புகள் உண்டு.
சிறிய கதைகள் பலவகை. உதாரணகதைகள் நீதிக்கதைகள், உருவகக் கதைகள், நிகழ்ச்சித்துணுக்குகள் எல்லாமே சிறிய கதைகள்தான்.
பள்ளியில் காக்கா வடை சுட்டது போன்ற நீதிக்கதைகளை நாம் படித்திருப்போம். ஏசுகிறிஸ்து, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் நிறைய உதாரணக் கதைகளை சொல்லியிருக்கிறார்கள். பஞ்சதந்திரக் கதைகள் ஈசாப் குட்டிக்கதைகள் போல பலவகையான உருவகக் கதைகளை நாம் கேட்டிருபோம்.
இவை ஏதும் ‘சிறுகதை’கள் அல்ல.
புதுமைப்பித்தன் முதல் சுஜாதா வரையிலான எழுத்தாளர்கள் எழுதும் சிறுகதைகளுக்கும் இவற்றுக்கும் முக்கியமான ஒரு வேறுபாடுகள் உண்டு. அதுதான் சிறுகதையின் அடையாளம்.
அது என்ன?
அதை கதையின் முடிப்பில் உள்ள ‘திருப்பம்’ என்று சொல்லலாம். இதை ஆங்கிலத்தில் ‘twist’ என்று சொல்கிறார்கள்.
அதாவது ஒரு சிறிய கதையை சிறு கதையாக ஆக்குவது திருப்பம்தான். ‘சிறுகதை என்றால் இறுதியில் திருப்பம் உள்ள சிறிய கதை’ என்று எளிமையாக வரையறை செய்யலாம்.
சிறுகதையின் திருப்பம் எப்படி உருவாகிறது?
பிற கதைகளையும் சிறுகதையையும் ஒப்பிட்டுப்பார்ப்போம்.
பிற கதைகளில் ஒரு மையம் இருக்கும். அந்த மையத்தை நமக்குச் சொல்வதற்காகவே அந்தக் கதை நிகழும். கதையை வாசித்து முடித்ததும் அந்த மையம் நம் மனதில் அழுத்தமாக பதியும்.
எளிமையான உதாரணத்தையே வைத்துக் கொள்வோம்.
1. ”ஒரு ஊரில் ஒரு காகம் இருந்தது. அந்தக் காகம் தன்னைப்பற்றி உயர்வான கற்பனை கொண்டதாக இருந்தது.
2. ஒருநாள் அந்தக் காகம் ஒரு வடையை திருடிக் கொண்டுவந்து மரத்தில் அமர்ந்தது.
3. அப்போது அங்கு ஒரு நரி வந்தது. அது தந்திரக்கார நரி
4. நரி காகத்திடம் ”காக்காயே உன் குரல் இனிமையானது என்றும் நீ சிறந்த பாடகன் என்றும் கேள்விப்பட்டேன். ஒரு பாட்டு பாட மாட்டாயா ?” என்று கேட்டது
5. புகழ்ச்சியில் மயங்கிய காகம் வாயைத்திறந்து ”கா!கா!”என்று பாட்டு பாடியது.
6. அப்போது வடை கீழே விழுந்தது. நரி வடையுடன் ஓடிப்போயிற்று.
7. புகழ்ச்சிக்கு மயங்குகிறவன் ஏமாளி ”
இது ஒரு நீதிக்கதை. இந்தக்கதையின் மையம் என்ன ? சொற்றொடர் 7 தான். மொத்தக்கதையும் அந்த மையத்தை நமக்குச் சொல்லும்பொருட்டே அமைந்துள்ளது. கதை முடிந்ததும் நமக்கு அதன் மையக்கருத்து தெளிவாக புரிந்துவிடுகிறது.
ஏழாவது சொற்றொடர் இல்லாவிட்டாலும்கூட அந்த நீதியை நாம் அடைந்துவிடமுடியும்.
இதேகதை இப்படி முடிகிறது என்று வைத்துக் கொள்வோம். ஐந்தாவது சொற்றொடருக்குப் பின்னால் கதை இப்படி உள்ளது
”புகழ்ச்சியில் மயங்கிய காகம் வடையை தன் காலால் பிடித்துக்கொண்டு வாயைத்திறந்து ”கா!கா!”என்று பாட்டு பாடியது.
நரி வாயைப்பிளந்து நிற்கையில் காகம் சொன்னது ” அஸ்குபுஸ்கு….ஒன்றாம் வகுப்பு பிள்ளைகள் இந்தக் கதையை பாடத்தில் படிப்பதை நான் நிறையதடவை கேட்டிருக்கிறேன்”
இது இப்போது ஒரு சிறுகதையின் வடிவத்தை அடைந்துவிட்டது. இறுதியில் உள்ள திருப்பம்தான் இதை சிறுகதையாக மாற்றுகிறது.
பிற கதைகளில் அதன் மையக்கருத்துதான் அதன் மையம். சிறுகதையில் அதன் திருப்பமே அதன் மையம். ராட்சதனின் உயிர் ஏழுமலை உச்சியில் உள்ள குருவியில் இருப்பதுபோல சிறுகதையின் உயிர் அதன் திருப்பத்தில் உள்ளது.
இப்போது நீங்கள் வாசித்த நல்ல சிறுகதைகளை யோசித்து பாருங்கள்
திருப்பம் எதற்காக?
திருப்பத்தை முக்கியமானதாகக் கொண்டு சிறுகதைவடிவம் உருவாகக் காரணம் என்ன?
முதல் காரணம், வாசகனின் கற்பனைக்கு அதிக இடம் கொடுப்பதேயாகும். மற்ற கதைகளில் கதையின் மையத்தை புரிந்து பெற்றுக்கொள்ளும் இடத்தில் வாசகன் இருக்கிறான். ஆனால் சிறுகதையில் வாசகனை கதைக்குள் இழுக்கிறான் ஆசிரியன். வாசகன் கதைமுடிவைப்பற்றி என்ன நினைக்கிறான் என்று ஊகித்து அதற்கு நேர் எதிராக கதையை முடித்து அவனை திகைக்க வைக்கிறான். கதைவாசிப்பு என்ற செயலில் வாசகன் ஆற்றும் பணி மேலும் அதிகமாக ஆகிறது.
இதைத்தான் ‘வாசகப் பங்கேற்பு’ என்ற கலைச்சொல்லால் திறனாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நவீன இலக்கிய வடிவங்கள் எல்லாமே வாசகப்பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் உருவானவையே. இலக்கிய வடிவங்களில் வரும் எல்லா மாற்றங்களும் மேலும் மேலும் வாசகப்பங்கேற்பை உருவாக்கும் பொருட்டு வருவனவே.
இப்படி வாசகப் பங்கேற்பை அதிகரிப்பதற்கான தேவை என்ன வந்தது?
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சு ஊடகம் உருவாகி வளர்ந்ததும் கதைகள் எழுதுவதும் வாசிப்பதும் பல்கிப் பெருகிற்று. சிந்தித்து பாருங்கள், இதழ்கள், சினிமா, தொலைக்காட்சி என்று நாம் ஒருநாளில் எத்தனை கதைகளைக் கேட்கிறோம்! சொல்லப்போனால் மீன் நீரில் திளைத்து வாழ்வது போல நாம் கதைகளில் வாழ்கிறோம்.
இத்தனை கதைகள் வந்து நிறைந்தபோது கதைகளில் வாசகனின் பழக்கம் அதிகமாயிற்று. ஒரு கதையை படிக்கும்போதே அவன் முடிவை ஊகிக்க ஆரம்பித்துவிட்டான். அவ்வாறு ஊகிக்கக் கூடிய கதைகளில் அவனுடைய ஆர்வம் குறைந்தது. சிறுகதை வடிவம் வாசகனின் ஆர்வத்தை தக்கவைத்துக் கொள்ளும்பொருட்டே உருவாயிற்று. வழக்கமான கதைவாசகன் ஒரு கதையை எப்படி ஊகிப்பான் என்பதை கதையாசிரியனே ஊகித்து அதற்கு மாறாக கதையை முடிக்கிறான். இது வாசகனை கதையைப்பற்றி சலிப்படையாதிருக்கச் செய்கிறது.
உண்மையில் சிறுகதை என்ற வடிவம் தொடக்கத்தில் பொழுதுபோக்கு இதழ்களில் வாசகனுக்கு ஆர்வமூட்டி முடிவில் இன்பத்தை அளிக்கும் ஒருவகை ‘கதை விளையாட்டாக’வே உருவாயிற்று. சிறுகதை முன்னோடிகளான ‘எட்கார் ஆல்லன் போ’, ‘ ஓ.ஹென்றி ‘ போன்ற படைப்பாளிகளின் கதைகள் இத்தகைய விளையாட்டுகளாகவே உள்ளன.
சிறுகதையை வாசிக்கும்போது வாசகன் வெறுமே கதைபடிப்பவனாக இல்லாமல் கதையை பலவாறாக ஊகித்து புனைந்தபடியே செல்கிறான். ‘இப்படி இருக்குமோ? இப்படி முடிப்பாரோ! ‘ என்றெல்லாம் அவன் எண்ணிக் கொண்டே படிக்கிறான். இப்போது கதையில் வாசகன் ‘பங்கேற்க’ ஆரம்பித்துவிடுகிறான். அவனும் அக்கதையை தனக்குள் எழுதுகிறான். ஆகவே இங்கே வாசகன் வெறுமெ வாசகனாக இல்லாமல் ‘இணை ஆசிரியனாக’ செயல்படுகிறான்.
நவீன ஆக்கங்களில் வாசகன் அப்படைப்பாளிக்கு இணையாகவே கற்பனையை செயல்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். இது இன்றைய இலக்கிய திறனாய்வில் பலவாறாக விரிவாகப் பேசப்படுகிறது. சிறுகதையில் உள்ள திருப்பம் வாசக பங்கேற்பை அதிகரிக்கும்பொருட்டு உருவானதே.
சிறுகதை என்பது புத்திலக்கியத்தின் ஒரு முக்கியமான வடிவம். மரபிலக்கியம் ஏற்கனவே சமூகத்தில் உள்ள கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் வலியுறுத்தும் போக்கு கொண்டது. புத்திலக்கியம் அவற்றை மறுத்து அல்லது பரிசீலனைசெய்து பேசும் நோக்கம் கொண்டது. சிறுகதையில் உள்ள திருப்பம் இதற்கு மிக வசதியானதாக அமைந்தது. ஒரு பிரச்சினையை பேசியபடியே வந்து சட்டென்று ஒருபுதிய கோணத்தை திறப்பதற்கு சிறுகதையே மிகச்சிறந்த வடிவம்.
புத்திலக்கியவாதிகள் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை என்பது பலவிதமான முரண்பாடுகளால் ஆனது என்று எண்ணினார்கள். வாழ்க்கையில் உள்ள முரண்பாடுகளைச் சொல்வதற்கும் சிறுகதை சிறந்த வடிவம்.
மாப்பசான், ஆண்டன் செகாவ் போன்ற படைப்பாளிகள் இவ்வாறு சிறுகதையை கையாண்டு அதைஇலக்கியத்தரமான ஒரு வடிவமாக மாற்றினர்.
சிறுகதையின் வடிவம் என்ன?
எல்லா கதைகளும் தங்கள் மையத்தை முன்வைப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கும். அதற்காகவே அக்கதைகளில் உள்ள எல்லா கூறுகளும் இயங்கும்.
அப்படி மையத்தை முன்வைக்க உதவாத விஷயங்களை ஒரு கதை சொல்லிக் கொண்டிருக்குமென்றால் ‘சரியான வளவளப்பு”என்று நாம் சொல்வோம்.
உதாரணமாக முன்னர் சொன்ன கதையை இப்படி ஆரம்பிக்கலாம்.
”ராஜகிருகம் என்ற ஊரில் ராஜசிம்மன் என்ற ஒரு மன்னன் ஆட்சி செய்துவந்தான்
அவன் நேர்மையான மன்னன். மக்கள் அவனை நேசித்தார்கள்.
அவன்நாட்டில் ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டில் ஏராளமான பறவைகளும் விலங்குகளும் இருந்தன.”
இதன் பின் முதல் சொற்றொடர் வந்தால் நாம் சலிப்படைவோம். கதை புகழ்ச்சியைப்பற்றியது. கதைமாந்தர் காகமும் நரியும். இதில் மன்னனும் காடும் எதற்கு என்று கேட்போம்.
சரி அந்தப் பாட்டியைப் பற்றி ஒரு வர்ணனை கொடுத்தால் என்ன?
”அந்த ஊரிலே குப்பம்மா என்று ஒரு பாட்டி இருந்தாள். அவள் நல்ல பாட்டி. அவளுக்கு யாருமே இல்லை. அவள் அனாதை. ஆகவே வடை சுட்டு விற்று வாழ்ந்து வந்தாள்”
கதை பாட்டியைப்பற்றியதே அல்ல. ஆகவே பாட்டியைப்பற்றி வர்ணித்தால் நாம் பொறுமை இழப்போம்.
இதேபோலவே நரியின் முன்கதையையோ காகத்தின் பின் கதையையோ விரிவாகச் சொல்லப்போனாலும் அலுப்புதான்.
கதையின் மையம் புகழ்ச்சிக்கு மயங்குதல். அதைச் சார்ந்தே கதையின் எல்லா உறுப்பும் இருக்கும்.
இதைத்தான் கதையின் ஒருமை என்கிறார்கள். கதைகளைப்பற்றி பேசும்போது கச்சிதமான வடிவம் , வடிவ நேர்த்தி என்றெல்லாம் பொதுவாகச் சொல்வது ஒருமையைப் பற்றித்தான்.
ஒருமையை உருவாக்குவது எது? நோக்கம்தான்.
எந்த நோக்கத்துடன் ஒரு கதை எழுதப்படுகிறதோ அதன்பொருட்டே அந்தக் கதையின் எல்லா விஷயங்களும் அமைந்திருப்பதே ஒருமை.
உண்மையில் கதைகள் மட்டுமல்ல ஒருவர் சாதாரணமாகப் பேசும்போதே ஒருமை இல்லாவிட்டால் நம்மால் அதை கேட்க முடியாது.
ஆனால் சிறுகதை நேர்மாறாக இருக்கிறது. அது கூறவந்ததை நேராக முன்வைப்பதில்லை என்று கண்டோம். அது திருப்பத்தைத்தான் தன் மையமாகக் கொண்டிருக்கிறது. அப்படியானால் அதன் ஒருமை எப்படி உருவாகும்?
இங்கும் நாம் பார்க்க வேண்டியது நோக்கத்தைத்தான். சிறுகதையின் நோக்கம் ஒரு மையக்கருத்தை சொல்வது அல்ல. ஒரு திருப்பத்தைச் சொல்வதுதான்
அப்படிப் பார்த்தால் ஒரு சிறுகதையில் உள்ள எல்லா கூறுகளும் அந்த திருப்பத்தை சிறப்பாக நிகழ்த்த உதவியிருக்குமென்றால் அது ஒருமை உள்ள சிறுகதை.
திருப்பத்தை சிறப்பாக நிகழ்த்த வேண்டுமென்றால் அதை வாசகன் முன்னதாகவே ஊகிக்கக் கூடாது. அதற்கு சிறந்த வழி வாசகனை வேறு வகையில் ஊகிக்க வைப்பது. கதை ஒரு குறிப்பிட்ட முடிவை நோக்கி குவிந்து ஒருமைகொண்டு செல்லும். அந்த முடிவை வாசகன் தன் மனதில் உருவாக்கியிருப்பான். சட்டென்று கதை வேறு ஒரு எதிர்பாராத முடிவை சென்று அடையும்.
அதாவது ஒருமை கொண்ட ஒரு கதையும், மாறான முடிவும் கொண்டதே சிறுகதையின் வடிவம் .
NIE | Ministry of Education | School Net | Department Examination
AL-Mubarak Central College
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk
Home | Al-Mubarak | Ramzy | School Pic Gallery | Staff | For Student | For Teacher | Exam paper | Others
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk