தொடர்........
கதையை செறிவாக்குவது
ஏற்கனவே சொன்னது போல சிறுகதை ஒரு திருப்பத்தை அல்லது முத்தாய்ப்பை முன்வைக்கும் வடிவம். அதாவது அது ஒரு புள்ளி மட்டுமே. அந்தப் புள்ளியை வாசக மனதில் நிகழ்த்தவே மொத்தக் கதையும் செயல்படுகிறது
ஆகவே சிறுகதை கச்சிதமாக இருக்கவேண்டியுள்ளது. அப்படி கச்சிதமாக இருப்பதற்கு அடிப்படையான தேவைகள் இரண்டு.
ஒன்று: யாருடைய கதை என்ன சிக்கல் என்பதை தெளிவாக வரையறுப்பது
இரண்டு : அந்தக்கதை ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட சூழலில் நடந்து முடிவது.
ஆனால் வாழ்க்கையை நாம் அப்படி ஒரு புள்ளியில் நிறுத்தி விட முடியாது. அது முன்னும் பின்னும் விரிந்து கிடக்கும். அவற்றை சொல்லாமல் பிரச்சினையை சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால் கதை பரந்து விரிந்துவிடும்.
ஆகவேதான் சிறுகதை வடிவம் கதையை செறிவாக்குகிறது. எப்படி? பல வழிகள் உள்ளன.
ஹரி எதிலும் ஒழுங்கில்லாதவன். பொறுப்பற்றவன்.காரணம் அவன் பணக்காரக் குடும்பத்தில் பிறந்து தன்னிச்சையாக வளர்ந்தவன். நிர்மலா உழைத்து வளர்ச்சி அடைந்தவள். தன்னம்பிக்கை உடையவள். இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் நிர்மலாவுக்கு ஹரியின் கட்டுப்பாடில்லாமை பிடிக்கவில்லை. ஹரிக்கு அவள் தன்னை கட்டுப்படுத்த நினைப்பது பிடிக்கவில்லை. பிரிய தீர்மானிக்கிறார்கள். பிரியும் முன் ஓர் இடத்தில் சந்திக்கிறார்கள். அப்போது தெரிகிறது ஒருவருக்கு இன்னொருவர் தேவை என்பது. கட்டுப்பாடான வாழ்க்கையின் நிம்மதியை நிர்மலா ஹரிக்கு காட்டுகிறாள்.கட்டுப்பாடுகளுக்கு அப்பார்பட்ட வாழ்க்கையின் சுதந்திரத்தை அவன் அவளுக்கு காட்டுகிறான். அவர்கள் இணைய முடிவெடுக்கிறார்கள்.
இது ஒரு சிறுகதை என்று வைத்துக் கொள்வோம். ஹரி, நிர்மலா இருவரின் பின்புலத்தை கதைக்குள் சொல்லவேண்டுமல்லவா? அவர்களின் எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் சொல்ல வேண்டுமல்லவா? அவர்களுடைய அப்பாஅம்மா , இறந்தகாலம் அனைத்தையும் சொல்லி அவர்கள் பழகிய நாட்களை விவரித்து கதையை எழுதினால் கதை எப்படி இருக்கும்? சிறுகதையின் ஒருமை கைகூடுமா?
அப்படியானால் எப்படி கதையை உருவாக்குவது? அவர்கள் பிரிய தீர்மானித்து ஒரு ஓட்டலில் கடைசியாக சாப்பிடும்போது கதையை தொடங்கலாம். ஏன் பிரிய தீர்மானித்தார்கள் என்பதையெல்லாம் கதையின் ஓட்டத்தினூடாக சொல்லலாம். கதை முடிவில் பிரிய வேண்டாம் என்ற முடிவை எடுக்கிறார்கள். கதைக்களம், காலம் எல்லாம் குறுகியது. இரண்டே கதாபாத்திரங்கள். கதை கச்சிதமாக இருக்கும்.
முன்கதையை மூன்று வழிகளில் சொல்லலாம்.
ஒன்று, பின்னோக்கு உத்தி [Flash Back] ஆனால் பொதுவாக சிறுகதைகளில் இது செயற்கையாகவே தெரிகிறது.
இரண்டு: கதாபாத்திரங்களின் எண்ணங்களில் ஆங்காங்கே நடந்தவற்றைச் சிதறவிடுவது. இதை கட்டுப்பாட்டுடன் செய்ய வேண்டும். கதைநிகழ்ச்சிகளின் ஓட்டம் அறுபட்டு எண்ணங்கள் தனியாக ஓட ஆரம்பிக்கக் கூடாது
மூன்று: உரையாடல்களில் இயல்பாக அவை வந்து சேர்ந்து வாசகன் என்ன நடந்தது என்று ஊகிக்கலாம். இதுவே சிறுகதைக்கு மிகமிக உகந்த வடிவமாகும். ஹெமிங்வே இதில் நிபுணர். தமிழில் அசோகமித்திரன் சுஜாதா இருவரும் திறன் மிக்கவர்கள்.
இவ்வாறு கதையை ஒரு சிறிய இடத்துக்குள் செறிவாக்கி நிறுத்தியபிறகே சிறுகதையைச் சொல்ல வேண்டும்.
சிறு கதையின் தொடக்கம்
சிறுகதையின் தொடக்கம் ஒருபோதும் பீடிகையாக இருக்கக் கூடாது. செறிவானபடி கதையை அமைப்பதற்கு சிறந்த வழி கதையை அதன் மையத்திலேயே தொடங்குவதுதான். எதைப்பற்றிய சிறுகதையோ அதையே தொடக்கத்தில் சொல்ல ஆரம்பிக்கலாம்.
மேலே சொன்ன கதையை இப்படி தொடங்கலாம்.
”சரி, நேரமாகிறது எப்போதாவது முடிந்தால் பார்க்கலாம்”என்றாள் நிர்மலா . அவளுக்கு நெஞ்சை அடைத்தது. அதை முகத்தில் காட்டாமலிருக்க பார்வையை வேறுபக்கம் திருப்பினாள். ஹரியின் முகம் சிவந்து கண்கள் ஈரமாக இருந்தன.
நேரடியாக கதைக்குள் குதித்துவிட்டால் திசை திரும்பாமல் கதை முடிவை நோக்கி ஓடும்.
சிறு கதையின் முடிவு
சிறுகதையின் முடிவு அதன் திருப்பத்தில் உள்ளது என்றோம். அது வாசகனை அந்தக் கதையை முற்றிலும் புதிதாக மீண்டும் கற்பனையில் எழுப்பச் செய்யவேண்டும்.
அப்படியானால் அது முடிந்தவரை குறைவான சொற்களில் சொல்லப்பட வேண்டும். எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு வாசகனின் கற்பனைக்கு விடப்பட வேண்டும்.
நல்ல கதைகளில் கடைசி சொற்றொடரில் கதையின் திருப்பம் வெளிப்படுவதைக் காணலாம்.
திருப்பம் வெளிபப்ட்டதுமே கதை முடிவது நல்லது. அதற்குப்பிறகுவரும் ஒவ்வொரு சொல்லும் கதைக்கு பாரமே
சிறுகதையின் வளர்ச்சிக்கட்டம்
இதுவரை நாம் பேசியது சிறுகதையின் ‘செவ்வியல்’ [Classic] வடிவம் பற்றியாகும். இலக்கியம் என்பது தொடர்ந்து வளர்ந்துகொண்டெ இருப்பது. ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொருவிதமான தனித்தன்மைகொண்டதாக இருக்கும். ஆகவே இலக்கியத்துக்கு திட்டவட்டமான இலக்கணம் இருக்காது, இருக்கக் கூடாது. நம் முன்னோர்கள் இதையே ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என்றார்கள்.
அதேசமயம் ஒரு வரையறை இல்லாமல் எந்த வடிவத்தைப் பற்றியும் நாம் பேசமுடியாது.ஆகவே சிறந்த படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஓர் இலக்கணம் உருவாக்கப்படுகிறது. இதையே செவ்வியல் வடிவம் என்கிறோம். அதைத்தான் நாம் பயில வேண்டும். பிறகு அதிலிருந்து மேலே சென்று மேலும் நுட்பத்துடன் படைப்புகளை உருவாக்கலாம்.
சிறுகதையின் முதல் கட்டத்தில் திருப்பம் முக்கியமானதாக கருதப்பட்டது. இக்காலகட்டத்தில் அந்த திருப்பம் மிக வெளிப்படையாக கதையில் இருக்கும். வாசகன் அதை சந்தித்ததுமே வியப்பும் வேகமும் கொள்வான். மொத்தக் கதையையையும் அந்த முடிவின் அடிப்படையில் மனதுக்குள் ஓட்டிப்பார்ப்பான். கதையில் அதுவரை சொல்லப்பட்ட அனைத்தையும் இந்த முடிவின் அடிப்படையில் மீண்டும் பரிசீலனை செய்வான். கதை மீண்டும் தொடங்கும். சுஜாதா தமிழில் இத்தகைய கதைகளை நிறைய எழுதியிருக்கிறார். உதாரணம்: நகரம்
இரண்டாம் கட்டத்தில் அந்த திருப்பத்தை மிகச்சுருக்கமாகவோ நுட்பமாகவோ சொல்லத் தொடங்கினார்கள். திருப்பம் ஒரேவரியில் குறிப்பால் உணர்த்தப்பட்டிருக்கும். ஆகவே முதலில் திருப்பத்தை கற்பனை செய்து ஊகிக்கும் பொறுப்பு வாசகனுக்கு வருகிறது. அதன் பின்னர் அதன் அடிப்படையில் அவன் கதையை மீண்டும் மனதில் கற்பனைசெய்து கொள்கிறான். வாசகனின் பங்கேற்பை அதிகரிக்கிறது. அசோகமித்திரனின் பல கதைகள் இதற்கு சிறந்த உதாரணமாக அமைபவை. சிறந்த உதாரணம் : பிரயாணம்
மூன்றாவது கட்டம் வந்தது. சிறுகதையின் திருப்பம்கொண்ட முடிவு எந்த விளைவை ஏற்படுத்துகிறது என்று பார்த்தார்கள். வாசகனை அந்த முடிவில் இருந்து மேலும் முன்னகர்ந்து மேலும் விரிவான கதையை கற்பனைசெய்ய வைக்கிறது அது இல்லையா ? அப்படியானால் சிறுகதையின் முடிவு வாசகனை மேலும் முன்னகரச் செய்தாலே போதுமே. அது திருப்பம் ஆக இருந்தாகவேண்டியதில்லை.
வேறு எப்படி இருக்கலாம்? ஒரு சிறந்த கவிதைவரி நம்மை பலவிதமான கற்பனைகளுக்குக் கொண்டுசெல்கிறதே. அதேபோல கவித்துவமான ஒரு முடிவு சிறுகதைக்கு இருந்தால் போதாதா? இவ்வாறாக யோசித்தபோது கவித்துவ முத்தாய்ப்பு கொண்ட சிறுகதைகள் உருவாயின. ஒருகதை அதன் முடிவில் சட்டென்று கவிதைபோல ஆகும். அந்த முடிவிலிருந்து கதையை மீண்டும் புதிதாக கற்பனைசெய்ய முடியும். வண்ணதாசன் எழுதிய கதைகள் இதற்குச் சிறந்த உதாரணங்கள். உதாரணம் நிலை.
இவ்வாறு சிறுகதை வடிவம் வளர்ந்து விரிந்து சென்றபடியே உள்ளது
எழுத ஆரம்பிக்கும்போது எழுத்தில் கவனம் கொள்ளவேண்டிய மூன்று தொழில்நுட்ப விஷயங்களை மட்டும் சொல்லி முடிக்கிறேன்.
1. ”சொல்லாதீர்கள், காட்டுங்கள்.” எழுத ஆரம்பிப்பவர்கள் கதைகளை சுருக்கமாகச் சொல்ல முயல்வார்கள். காரணம் அது நாம் சாதாரணமாக வாழ்க்கையில் செய்வது. நடந்ததை சுருக்கமாக சொல்வது. ஆனால் இலக்கியத்தின் நோக்கம் அனுபவத்தைத் தெரிவிப்பது அல்ல. அது கற்பனை மூலம் வாசகனை அந்த அனுபவத்தை தானும் அடைய வைக்கவே முயலவேண்டும். ஆகவே அந்த கதை கண்முன் உண்மையில் நிகழ்ந்தால் எப்படி இருக்குமோ அந்த காட்சியனுபவத்தை வாசகனுக்கு அளியுங்கள். நுண்ணிய தகவல்கள் மூலம் கதையை கண்ணிலே காட்டுங்கள். கடற்கரை வாழ்க்கையை எநக்குச் சொல்லாதீர்கள், நானே அங்குவந்து வாழும் அனுபவத்தை எனக்கு அளியுங்கள்.
2 ”கதையின் கருத்தை கதைக்குள் சொல்லாதீர்கள்”. கதை என்பது வாசகனுக்கு அனுபவத்தை அளிப்பது. கருத்தை அவனே உருவாக்கிக் கொள்ளட்டும். வாசகனுக்கு நீங்கள் ஒரு கருத்தைச் சொன்னால் அது உங்கள் கருத்து. அவனே அதை கதையில் கண்டடைந்தால் அது வாசகனின் கருத்து. கதைக்குள் என்ன சொல்லப்படுகிறது என்பது அல்ல முக்கியம். என்ன உணர்த்தப்படுகிறது என்பதுதான் முக்கியம்.
3 ”கதைவடிவங்களை கற்றுக்கொள்ளுங்கள்” .கதையின் வடிவம் பற்றிய ஒரு பிரக்ஞை எழுத்தாளனுக்கு தேவை. இன்றுவரை கதையிலக்கியம் அடைந்துள்ள சிறந்த வடிவத்தை முயன்று கற்று அதை நாமும் அடைவதற்கான முயற்சி தேவை.
NIE | Ministry of Education | School Net | Department Examination
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk